உலகம்
ஜோ பிடன் வெற்றியை தடுக்க சதி : அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை! #Album
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான முறைப்படியான வாக்கு எண்ணிக்கையை இறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியை உறுதி செய்ய நடைபெற்ற கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பெரும் முயற்சிகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.
எப்படியேனும் ஜோ பிடனுக்கு ஆதரவான தேர்தல் முடிவுகளை வெளியிட முடியாமல், தனது தலைமையிலான ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் டொனால்டு டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, அவரது குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு பகிரங்க தகராறில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல், “அமெரிக்க செனட் சபையின் தலைவராக உள்ள துணை ஜனாதிபதியும் டிரம்ப்பின் ஆதரவாளர்களில் ஒருவரான மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை தேர்வு பெறவில்லை என்று அறிவிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறார்” என டிரம்ப் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப்பின் அனைத்து சதிகளை முறியடித்து, கடும் எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்றைய தினம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் கட்டிடத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.
இதனிடையே, டிரம்ப்பின் ஆதரவாளர்களும், வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த சிலரும், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த பாதுகாப்பு படையினர் அவர்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு படையினரிடையே மோதலில் ஈடுபட்ட டிரம்ப்பின் ஆதரவாளர்கள், பாதுகாப்பு படையினரியைத் தாக்கிவிட்டு கட்டிடத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பில் இருந்த அமெரிக்க போலிஸார் அவர்களை தடியடி நடத்திய கூட்டத்தை கலைத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து கலவரங்களில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒரு படுகாயமடைந்தார்.
அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் ஆதரவாளர்களுடனான மோதலில் போலிஸார் பலரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!