உலகம்
“SBI வங்கியே அதானிக்கு கடன் தராதே” : அதானியை எதிர்த்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம்!
அதானி குழுமம் இந்தியாவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம். எரிசக்தி நிறுவனமான அதானி குழுமம், பல தளங்களில் தனது பணியை செய்து வருகிறது. இந்தியாவில் அதானி நிறுவனம் எந்த தொழில் முயற்சிகளில் ஈடுபட்டாலும், அதற்கு பா.ஜ.க அரசு முழு ஆதரவை அளிக்கும். அதனால் ஏற்படும் இழப்புகள் குறித்து ஒருபோதும் பா.ஜ.க அரசு கவலைப் படுவதில்லை.
மோடியின் ஆட்சியில் அதானி குழுமம் பன்மடங்கு லாபம் சம்பாதித்துள்ளது. குறிப்பாக, அதானி குழுமத்தின் பணிகளால் இந்திய சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது என சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்க திட்டத்துக்கான பணிகளை தொடங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கலீலி ஆற்றுப்பள்ளத்தாக்கில் கார்மிகேல் நிலக்கரி சுரங்க திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியிருந்தது.
ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு, கருப்பு கழுத்து குருவி இன பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதானி குழுமத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை திரும்பப்பெறவேண்டும் என அந்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், அதானி நிறுவனம் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஆகும் செலவில் 1 பில்லியன் டாலர் பொதுக் கடனை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வழங்க முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
முன்னதாக ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகள் அனைத்தும், மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அதானியின் குயின்ஸ்லாந்து நிலக்கரி திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். இதனால் திட்டத்தைத் தொடரமுடியாமல் தவித்த அதானிக்கு எஸ்.பி.ஐ நிதி அளிப்பதாக வந்த செய்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், வெளிநாடுகளில் உள்ள தனது நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் உள்ள வங்கிகளில் பணத்தை பெற்றுக்கொள்ள அதானி முடிவெடுத்து மோடி அரசின் தலையீட்டால், எஸ்.பி.ஐ இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சூழலியலை சீரழிக்கத் துடிக்கும் அதானிக்கு இந்திய மக்களின் ஆதரவால் செயல்படும் எஸ்.பி.ஐ வங்கி உதவ முன்வருவது இந்திய சூழலியாளர்கள் மத்தியில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதானிக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்துள்ள மக்கள் அதன் ஒருபகுதியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தின் போது மைதானத்திற்குள் நுழைந்து அதானி நிறுவத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளை விளையாடவுள்ளது. அதன் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
இந்நிலையில் சிட்னி மைதானத்தின் வெளியே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் பலர் குவிந்தனர்.
போட்டி நடந்துகொண்டிருக்கும்போது அதானிக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் நுழைந்த 2 போராட்டக்காரர்கள் அதானி நிறுவத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பை காட்டினர். இதனால் மைதானத்தில் சலசலப்பு ஏற்படவே, பாதுகாவலர்கள் மைதானத்திற்குள் நுழைந்த 2 பேரையும் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!