உலகம்
ஜனநாயகத்தின் புதிய பரிமாணம் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் - உலக மக்களின் வாழ்த்துகளோடு நாமும் இணைவோம் : கி.வீரமணி
அமெரிக்கத் தேர்தலில் குடியரசுத் தலைவராகவும், துணைக் குடியரசுத் தலைவராகவும் சிறப்பாக வெற்றி பெற்றவர்களுக்கு, மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் உலகத்தவரால் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட ஒன்றாகும். டொனால்ட் டிரம்ப் - சென்ற முறை அதிபர் தேர்தலில் வென்று (குடியரசு கட்சி சார்பில்) மீண்டும் இரண்டாம் முறையாக அப்பதவிக்குப் போட்டியிட்டார். அவருடன் துணை அதிபர் மைக் பென்ஸ் என்பவரும் அக்கட்சியின் சார்பாக அப்பதவிக்குப் போட்டியிட்டார்!
டொனால்ட் டிரம்ப் தோல்விக்குக் காரணம்
ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் ஏற்கெனவே துணைக் குடியரசுத் தலைவராக பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது இருந்தவர்; அவர் இப்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
அதுபோலவே, தமிழ்நாட்டினை பூர்வீமாகக் கொண்டு, அமெரிக்காவில் குடியேறி, படித்து முன்னேறி, சட்ட அறிஞராகி, செனட்டராகிய கமலா ஹாரிஸ், துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, ஜோ பைடன் குழுவினராக, போட்டியிட்டார்!
கடந்த நான்கு ஆண்டின் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் மக்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக வேற்றுமைப்படுத்தும் வகையிலே - கருப்பின மக்கள்மீது காவல்துறை அதீதமாக நடந்துகொண்டதைக் கண்டு, உலகமே கொந்தளித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்தக் கொடுமைக்காக உரிய கண்டனத்தையும், நடவடிக்கைகளையும் எடுக்காமல், பாரபட்சமாக நடந்துகொண்டது உலகமறிந்த ஒன்று!
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேரை (அமெரிக்காவில்) பலி கொண்ட கொரோனா தொற்றை (கோவிட் 19) கட்டுப்படுத்த தனது ஆட்சியைப் போதிய அளவில் முடுக்கிவிடாமலும், தக்க ஆலோசனைக்குரிய தக்கார்களைக் கலந்து சிறப்பான வழிமுறைகளைச் செய்து, நோய் மேலும் பரவாமல் தடுக்க உதவாமல் முகக்கவசம் அணிவதைக்கூட தவிர்த்து வந்து, அதனைக் கேலி செய்வதுபோல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல, பற்பல ஆளுமைகளில் நடந்துகொண்டார் என்பது அந்நாட்டு குடிமக்களின் பலரது கருத்து.
தோல்வியை ஏற்காது அடம்!
விஞ்ஞானிகளும், விஞ்ஞான ஏடுகளும் கூட இவர் மீண்டும் அதிபர் பதவிக்கு வரக்கூடாது என்று கருதும் அளவுக்குச் சென்று, வெளிப்படையாக அக்கருத்தை எழுதும் அளவுக்குச் சென்றதும், பரபரப்பு மிகுந்த இந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு 16 கோடிக்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றது. கொரோனா கொடுந்தொற்றால் அஞ்சல் வழி வாக்குகள் (Postal Ballots) 5 கோடிக்குமேல் சென்றதும் இதற்குமுன் நடைபெற்றிராத ஒன்று!
வாக்கு எண்ணிக்கையின்போதும், போட்டி கடுமையாக இருந்த நிலையும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நீதிமன்றத்தில், தனக்கு சாதகமாக இருக்க வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு, உச்சநீதிமன்றத்தில் காலியான பதவிக்கு ஒரு நீதிபதியை மரபுக்கு மாறாக, அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக நியமனம் செய்ததும் பெரிய விமர்சனத்திற்குள்ளானது.
வாக்கு எண்ணிக்கையில் தனக்கு சாதகமான சூழல் இல்லை என்பதை டிரம்ப் உணர்ந்ததுமே, வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்; எனது வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு, பல மாகாணங்களில் வழக்கும் (தேவைப்பட்டால்), இறுதியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு; என்று தோல்வி பயத்தினால் - முன் எப்போதுமில்லாத அளவுக்கு தன்னிலை இழந்து கூற ஆரம்பித்துவிட்டார் டிரம்ப்.
அமெரிக்காவும், உலகமும் எதிர்பார்த்தபடியே தேவைக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஜோபைடன் அமெரிக்காவின் 46 ஆவது குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரோடு துணைக் குடியரசுத் தலைவராக கமலாஹாரிஸ் என்ற புதுமை புரட்சிப் பெண்ணும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை ஏற்க மாட்டேன் - தனது தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்ற அடாவடித்தனத்தை டிரம்ப் காட்டிக் கொண்டிருந்தார்.
நம்பிக்கையூட்டும் முதல் அறிவிப்புகள்
வெற்றி வீரர் ஜோ பைடன், வெற்றி வீராங்கனை திருமதி கமலா ஹாரிஸ் தங்களது வெற்றியை மிகுந்த அடக்கத்தோடு எதிர்கொண்டு, ‘‘அனைவருக்கும் உரிய அரசாக தாங்கள் அமெரிக்காவை கட்டமைத்து, பேதமில்லாத ஆளுமையைத் தந்து, புதிய திருப்பத்தை உருவாக்கிடுவோம் - ஜனநாயகத்தைக் கட்டிக் காப்போம்‘’ என்பதாக தங்கள் நன்றி அறிவிப்பு உரைகளில் கூறியிருப்பது - பெருந்தன்மையும், அரசியல் கண்ணியமும் மிக்கவை - மக்களுக்கும், உலகத்தவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இது உள்ளது!
தனது பதவியேற்புக்குப்பின் முதல் பணியாக முன்பு உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், கரியமில வாயுப் பெருக்கத்தைத் (Greenhouse Emission) தடுத்து, பாரக் ஒபாமா அதிபராக இருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட உலக நாடுகளைச் சம்பந்தப்படுத்திய, உலகை சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் உடன்பாட்டிலிருந்து வெளியேறிய அமெரிக்கா (டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது முறித்துக் கொண்ட நிலையில்) மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உலகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியை முன்னெடுப்பதாகவும், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கொண்ட ஆய்வாளர்களைக் கொண்ட குழு ஒன்றை உடனடியாக அமைத்து, கரோனா தொற்று வைரஸ் (கோவிட் 19) பரவாமல் தடுப்பதற்கான உடனடித் திட்டங்கள்பற்றி ஆலோசித்து செயல்படவிருப்பதாகவும் கூறியிருப்பது, அம்மக்களுக்கும், உலக மக்களுக்கும் நிச்சயம் ஒரு புது நம்பிக்கையை, தெம்பை ஊட்டக்கூடியதாகும்.
நிறவெறி எதிர்ப்பாளர் கமலா ஹாரிசின் வெற்றி - பாராட்டுக்குரியது
அமெரிக்கா குடியேறியவர்கள் நாடுதான் (Nation of Immigrants) என்ற நிலையில், உழைப்பவர்களுக்குரிய பாதுகாப்பற்ற நிலை அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. தேவையற்ற போர் மேக அச்சமும் உலகை அலைக்கழித்தது. அந்த இருண்ட காலம், இந்தப் புதியவர்கள் தேர்வுமூலம் - கிரகணத்திலிருந்து விடுபட்டு மீண்டும் வெளிச்சத்தோடு கதிரவன் ஒளி கிடைப்பது போன்ற உணர்வு - அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகத்தவர்களிடையே உருவாகியுள்ளது!
இந்தப் புதிய திருப்பத்தின்மூலம் இந்தியர்களுக்கு 5 லட்சம் குடியேற்ற உரிமை கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது என்பது இனிப்பான செய்தியாகும்!
அதைவிட சிறப்பு அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு பெண் - மனித குலத்தில் சரி பகுதியாக உள்ள பாலினத்தினர் மகிழும் அளவில், அறிவும், ஆற்றலும், ஆளுமையும், அங்கீகரிப்பும், ஆட்சித் தலைமைக்குரிய வாய்ப்பையும் பெற்று துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதன்மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது!
இதில் நமக்குள்ள இரட்டிப்பு மகிழ்ச்சி - அவர் தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்தவர் என்பதோடு, வாழ்நாள் முழுவதும் ஒரு மனித உரிமைக்கான போராளி - மனிதநேயர் - நிறவெறி எதிர்ப்பாளர் என்பது அவரது மகுடத்தின் தனி ஒளிமுத்துக்களாகும்!
உலக மக்கள் வாழ்த்துகளோடு நாமும் இணைகிறோம்
குடியரசுத் தலைவர் தேர்தலில் கடும் போட்டி நிலவியபோதும், சரியான முடிவை எடுக்க உதவியவர்களுக்கு, ஜனநாயகத்தின் புதிய பரிமாணம் என்றும் பாதுகாக்கப்படும் - உலகம் உய்யும் - உலக அமைதிக்கும், மக்களின் கசப்பற்ற கடமையாற்றுதலுக்கும் இந்த காலகட்டத்தில் சூழல் அமையும் எனும் மிகுந்த எதிர்பார்ப்போடு, புதியவர்களுக்கு உலகம் சொல்லும் வாழ்த்துகளோடு நமது வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்கிறோம்.
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து அமெரிக்க ஜனநாயகம், மீட்கப்பட்டு, நல்ல வண்ணம் தேறி, புது நம்பிக்கை, புத்தொளியை தந்து, புது உலகம் காண உதவ ஆயத்தமாகியுள்ளது என்பது நற்செய்தியாகும்! வெற்றி வாகை சூடியவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்!
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!