உலகம்
ஐ.நா மேடையில் வாய்ச்சண்டை போடும் உலக நாடுகள் : கொரோனா பாதிப்பு, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு எட்டப்படுமா?
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை சிதைத்து வரும் வேளையில் ஐ.நாவின் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த வாரம் முதல் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். ஐ.நா கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சீனா, ரஷ்யா நாடுகளிடையே தனது மோதல் போக்கைத் தொடர்ந்த அமெரிக்கா தற்போது ஐ.நாவிலும் தொடங்கியுள்ளது.
முன்னதாக ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனாவுக்கான தீர்வுகள் குறித்து பேசாமல், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாது இந்த பாதிப்பிற்கு சீனா முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப் ஆரம்பித்த இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா மேடையில் பேசத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘அரசியல் வைரஸ்’ பரப்புகிறார் என்று காட்டமான விமர்சனத்தை சீனா முன்வைத்தது. மேலும், ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தது.
அதேபோல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா எப்படி சிறுபான்மையினரை நடத்துகிறது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் அதன் பிறகான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் வைத்தார். சர்வதேச சட்டத்திட்டங்களின் படி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இந்தியாவில் அரசே தூண்டிவிட்டு இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்களை வஞ்சிக்கும் விரோதம் இருப்பதாக இம்ரான் பேசினார்.
இம்ரான் கானின் இந்த பேச்சு இந்தியாவுக்கு எரிச்சல் ஏற்படுத்த, அவர் பேசியதை ‘இடைவிடா ஆவேச உளறல்’ குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஐ.நா குழுவின் முதன்மைச் செயலர் மிஜிதோ வின்ட்டோ கூறுகையில், “இந்த மிகப்பெரிய ஐ.நா கூட்டத்தில் பாகிஸ்தான் பயன்படுத்திய வார்த்தைகள் ஐ.நாவின் சாராம்சத்தை அர்த்தமிழக்கச் செய்வதாக உள்ளது. பாகிஸ்தான்தான் இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினரை அழித்து வருகிறது. கட்டாய மதமாற்றம் செய்கிறது என ஆவேசமாக கூறினார்.
அதேபோல் ஐ.நா கூட்டத்தில் காஷ்மீர் குறித்து பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், “தெற்கு ஆசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு காஷ்மீர் விவகாரம் முக்கியமானதாகும். இந்த பிரச்னையை ஐ.நா.,வின் தீர்மானத்தின்படியும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியினார்.
துருக்கி அதிபரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், பாகிஸ்தானின் கூட்டாளியான துருக்கி, சர்வதேச அமைப்புகளில் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பி வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால், ஐ.நா. பொதுக்கூட்ட மேடை உலக நாடுகள் வார்த்தை மோதலில் ஈடுபடும் இடமாக மாறியது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் உலகம் மீண்டுவராத நிலையில், பாதிப்பு குறித்து உலக நாடுகள் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழலில், உலக நாடுகள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி காலநிலை மாற்றத்தால் பனிப்பாறை உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் மிக முக்கிய கூட்டமாக பார்க்கப்படும் ஐ.நா கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் வாய்ச்சண்டை மோதலில் ஈடுபடுவது சரியல்ல எனவும் விமர்சித்துள்ளனர்.
உலக நாடுகளின் இந்த மோதலால் ஆத்திரமடைந்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாததற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “கொரோனா தொற்று எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துவிட்டது. வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்த பெருந்தொற்று சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பிற்கு வைக்கப்பட்ட பரீட்சை. இந்தப் பரீட்சையில் நாம் அடிப்படையிலேயே தோல்வியடைந்து விட்டோம். உலக நாடுகள் இந்த தொற்று பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததும், நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, ஒற்றுமை இல்லாததுமே இதற்கு காரணம்.
ஒற்றுமையில்லாமலும், சீர்குலைந்து ஒழுங்கற்ற நிலையிலும் கொரோனாவை எதிர்கொண்டது போன்று உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொண்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என நான் அஞ்சுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!