உலகம்

பூச்சிகள் மூலம் தொற்றும் வைரஸால் 7 பேர் பலி - மீண்டும் உலக நாடுகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்திய சீனா!

உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவில் புதிதாக பூச்சி மூலம் பரவும் வைரஸ் கிருமி காரணமாக ஏழு பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதோடு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு, அன்ஹூய் மாகாணங்களில் டிக்-போர்ன் (Tick-Borne) எனும் வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலால் இது வரை 7 பேர் பலியானதுடன் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த பெண் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை எனத் தெரியவந்தாலும் தொடர் சிகிச்சைக்குப் பிறகும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து அவரது ரத்தத்தில் வெள்ளயைணுக்கள் வெகுவாகக் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாத தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து அவர் வீடு திரும்பினார். அவரைத் தொடர்ந்து பலரும் இதே பிரச்னைகளுடன் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டனர்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதனையின் மூலம் அவர்கள் டிக்-போர்ன் (Tick Borne) வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் 2011ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வகையான ஈ, வண்டு, உண்ணிகள் மூலம் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Also Read: தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேர் பலி... 5,684 பேருக்கு கொரோனா தொற்று! #CoronaUpdates