உலகம்

“ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்” - வெட்டுக்கிளி தொல்லையை ஒழிக்க பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பாதிப்புகளிலிருந்து இந்தியா இன்னும் மீளாத நிலையில், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயப் பயிர்களை, வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்து நாசம் செய்துகொண்டிக்கின்றன. இதன் காரணமாக விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெட்டுக்கிளிக் கூட்டம் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு மோசமானவை எனக் கடந்த கால நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகள் வெட்டுக்கிளி தாக்குதல்களால் மிக மோசமான பாதிப்பைச் சந்திக்கின்றன.

இந்நிலையில், வெட்டுக்கிளிகள் இந்தியாவையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றன. வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் கட்டுப்பாட்டு மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுமார் 3,00,000 லட்சம் லிட்டர் பூச்சிக்கொல்லியை வான்வழி மூலம் தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் ஒரு யோசனையைக் கூறியுள்ளனர். பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் ஊழியரான முகமது குர்ஷித் மற்றும் பாகிஸ்தான் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி தொழில்நுட்பவியலாளர் ஜோஹர் அலி ஆகியோர்தான் இந்த யோசனையை வழங்கியுள்ளனர்.

அதன்படி விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெட்டுக்கிளிகளைப் பிடித்து கோழிகளுக்கு உணவாக வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால், வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தை அழிப்பதோடு, கால்நடை உணவுத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய முகமது குர்ஷித், “வெட்டுக்கிளிகள் பகலில் மட்டுமே பறக்கின்றன, இரவு நேரங்களில் அவை மரங்கள் மற்றும் தாவரங்கள் இல்லாத திறந்தவெளி நிலத்தில் கூட்டம் கூட்டமாகத் தங்குகின்றன. சூரிய உதயம் வரும்வரை கிட்டத்தட்ட அவை அசைவில்லாமலேயே இருக்கின்றன. அந்த நேரத்தில் வெட்டுக்கிளிகளைப் பிடிப்பது எளிதான காரியம்.” எனத் தெரிவித்துள்ளார்.

வெட்டுக்கிளிகளைத் தீவனமாக்குவது குறித்துப் பேசியுள்ள கால்நடைத் தீவன நிறுவன மேலாளர் முகமது அக்தர், “வெட்டுக்கிளிகளிலிருந்து தயாரிக்கப்படும் தீவனத்தில் எந்த பிரச்னையும் இல்லை. பூச்சிக்கொல்லிகளை தெளிக்காமல் நாம் அவற்றைக் கைப்பற்ற முடிந்தால், அவற்றின் உயிரியல் மதிப்பு அதிகமாக உள்ளது. அவற்றை மீன், கோழி மற்றும் மாட்டுத் தீவனங்களாகப் பயன்படுத்தலாம்.

சோயா பீனை இறக்குமதி செய்து விலங்குத் தீவனமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதை விட அதிகமான புரதத்தை வெட்டுக்கிளிகள் கொண்டுள்ளன. வெட்டுக்கிளிகளை பிடிக்கும் கூலி மட்டும்தான் இதற்குச் செலவு. எனவே, இது ஒரு நல்ல முறை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நான் எடப்பாடி பேசுறேன் ஓவர் ஓவர்! வெட்டுக்கிளி: நான் தமிழகத்துக்கு வரமாட்டேன் ஓவர் ஓவர்!” #Locustsattack