உலகம்

“பொருளாதார நெருக்கடி நீண்டகாலம் இருக்கும்; புதிய முயற்சிகளுக்கான நேரம் இது” - உலக பொருளாதார மன்றம் தகவல்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, உற்பத்திக் குறைவால் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நிறுவனங்கள் பலவும், வருமான இழப்பை ஈடுகட்ட ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் அது மக்களை நேரடியாக பாதித்து வருகிறது.

இந்நிலையில், உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய இடர் ஆலோசனைக் குழுவும் மார்ஷ் மெக்லெனன் கம்பெனி மற்றும் சூரிச் காப்பீடு குழுவும் இணைந்து கடந்த மாதம் ஆய்வு ஒன்றை நடத்தின.

347 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், மூன்றில் இரண்டு பங்கு பங்கேற்பாளர்கள், அடுத்த 18 மாதங்களில் உலக பொருளாதாரத்தில் நீடிக்கும் சரிவு முதன்மையான கவலையாக இருப்பதாக பட்டியலிட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மேலாளர்கள், திவால் நிலை, இளைஞர்கள் மத்தியில் உச்சக்கட்ட வேலைவாய்ப்பின்மை போன்றவை ஏற்படுமென தெரிவித்துள்ளனர்.

உலக பொருளாதார மன்றத்தின் மேலாண்மை இயக்குநரான சாடியா ஜாஹிடி, “கொரோனா நெருக்கடி வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இது நீண்டகால தாக்கங்களுடன் ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வித்தியாசமாக முயற்சிகளைச் செய்வதற்கும், நிலையான, நெகிழக்கூடிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சிறந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் இப்போது ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.