உலகம்

#CoronaLockDown துப்பாக்கிகளை வாங்கிக் குவிக்கும் அமெரிக்க மக்கள்... எதற்கு தெரியுமா?

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா தொற்று காரணமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே முடங்கியுள்ளதால் பலர் அன்றாட உணவுக்கே அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற காலங்களில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதனால், அமெரிக்க மக்கள் தங்களையும் தங்களது உடைமைகளையும் தற்காத்துக் கொள்ள, துப்பாக்கி வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதம் எனினும், அங்கு பெரும்பாலானோர் தங்களின் பாதுகாப்புக்காகக் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் மட்டும், 20 லட்சம் துப்பாக்கிகளை அமெரிக்க மக்கள் வாங்கியுள்ளனர். பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், 2013ல் நியூ டவுனில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்தபோதும் அமெரிக்க மக்கள் துப்பாக்கி வாங்குவது உச்சத்தைத் தொட்டது. அதன் பின்னர், தற்போது துப்பாக்கி விற்பனை உச்சத்தைத் தொட்டுள்ளது.

மக்கள், தங்களின் பாதுகாப்புக்காகவே துப்பாக்கி வாங்குவதாகக் கூறப்பட்டாலும், இது வரும் நாட்களில் மிக அபாயமான விளைவை ஏற்படுத்தும் என்றும், துப்பாக்கி விற்பனையை கடுமையாக தடுக்க வேண்டியது அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read: #Corona: “ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா” - சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!