உலகம்
“மக்களை சாடும் ஸ்பெயின்; வென்ட்டிலேட்டர் இல்லாமல் அவதிப்படும் நியூயார்க்” - கொரோனா பாதிப்பின் நிலை என்ன?
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சீனா இருக்கிறது. இரண்டாவதாக ஐரோப்பாவின் இத்தாலியில் நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,215-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 80,589-ஆக அதிகரித்துள்ளது.
”பொறுப்பற்ற மக்கள்” - மக்களை சாடும் ஸ்பெயின் :
அதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கம், ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,858-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,056-ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு விதித்த சில கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஸ்பெயின் மக்களை அந்நாட்டு காவல்துறையினர் ”பொறுப்பற்ற மக்கள்” என விமர்சித்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலர், மருத்துவர்களின் அனுமதி இன்றி அவர்களே வீட்டிற்குச் சென்றதாக அந்நாட்டு காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
வென்ட்டிலேட்டர் பற்றாக்குறையில் தவிக்கும் நியூயார்க்!
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் 85,755க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 25,000 பேர் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் கொரோனா பலி 1,304 ஆக அதிகரித்துள்ளது.
நியூயார்க்கில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. புல்லட் ரயில்களை விட கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு தெரிவித்தார். 30,000 சுவாச கருவிகள் (வென்ட்டிலேட்டர்) தேவைப்படும் இடத்தில் வெறும் 7000 சுவாசக் கருவிகள் மட்டுமே உள்ளன என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 2,378 பேர் உயிரிழந்துள்ளனர்; 32,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி போலி செய்திகளையும் வதந்திகளையும் நம்பி ஈரானில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய ஆட்சியாளர்களுக்கு கொரோனா:
அந்தவகையில் கொரோனாவால் பிரிட்டனின் இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர். 11,816 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நடீன் டோரீஸ் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதனையடுத்து இளவரசர் சார்ள்ஸுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் முக்கிய ஆட்சியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இரண்டாம் கட்டத்தில் உள்ள இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 860-ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் நிலை?
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உள்ளது. இந்தியாவைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பாகிஸ்தான் அரசு, இன்னும் அந்நாட்டில் முழு அடைப்பை அறிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சில மாகாணங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் ஊடரங்கை கடைபிடித்து வருகின்றன. மக்களிடையே சமூக விலகல் குறித்து கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!