உலகம்

“வூஹானில் 3 நாட்களில் யாருக்கும் பாதிப்பில்லை” - சீனாவின் அதிதீவிர முயற்சிகளால் கட்டுக்குள் வந்த கொரோனா!

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த பாதிப்பைத் தடுக்க உலக நாடுகள் எதுவும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் தவிர வேறு உறுதியான திட்டமின்றி விழிபிதுங்கி உள்ளனர். இதனால், பரவுதலைக் கட்டுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பரிசோதனை முயற்சிகளை மட்டுமே சீனா, கியூபா போன்ற நாடுகள் செய்துவருகிறது. இந்த வைரஸ் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தல் என ஐ.நா அறிவித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரானில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், உலக நாடுகள் முழுவதும் பரவும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா தற்போது மீளத் துவங்கியுள்ளது. 2 வாரங்களில் கட்டப்பட்ட மருத்துவனை, நாட்டில் அனைத்துப் பகுதியில் இருந்தும் பணியாற்றிய மருத்துவத் துறை ஊழியர்களைக் கொண்டுவந்து ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு, ஒரு மாகாணத்தையே பூட்டிவைக்கும் LOCK DOWN ஆகிய முறைகளின் மூலம் தற்போது பாதிப்பைக் கட்டுப்படுத்தியுள்ளது சீனா.

மருத்துவத் துறையின் முழு ஒத்துழைப்பும், அரசின் அதிதீவிர முயற்சியினாலும் உயிரிழப்பு கட்டுப்படுத்தபட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவுதலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உலக மக்களை ஆச்சிரியப்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் புதிய தகவலை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பிறந்த வூஹான் மாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களில் தற்போதுதான் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக கொரோனா பரவாமல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சீனாவின் தேசிய சுகாதாரத்துறை கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சீன அரசு மேற்கொண்ட மருத்துவ முறைகளையும் உலக நாடுகளுக்கு காணொளிக் காட்சி மூலம் தெரிவிக்க இருப்பதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூபாய் 60 கோடி போதுமா?” - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!