உலகம்

ரத்த வரலாற்றின் சாட்சியம் ‘ஆஷ்விட்ஸ்' - 75 ஆண்டுகளைக் கடந்தும் அச்சமூட்டும் கொடூரம்!

ஆஷ்விட்ஸ் என்பது இரண்டாம் உலகப் போரில் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் நாஜி ஜெர்மனி படையால் கட்டப்பட்டு இயக்கப்பட்ட கொடூர வதை முகாம். 75 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த வதைமுகாமில் சோவியத் ரஷ்யா இராணுவம் நுழைந்து எஞ்சியிருந்தவர்களை விடுவித்த நாள் ஜனவரி 27.

யூதர்களைக் கொல்ல இனவெறி நாஜிக்கள் பயன்படுத்திய முறைகள், கேட்கும் எல்லோருக்கும் குலைநடுங்கச் செய்பவை. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை விஷவாயுக் கிடங்கில் அடைத்துக் கொலை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, சிம்பொனி இசையை ஆயிரம் டெசிபலில் அலறவிட்டுப் பலரைக் கொன்றது என நாஜிக்களின் கொடூர உணர்வுகள் யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.

யூதர்களைக் கொன்றுகுவித்த நாஜிக்களிடம் இருந்து, 75 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் எஞ்சியிருந்தவர்களைக் காப்பாற்றியது ஸ்டாலினின் சோவியத் ரஷ்யா இராணுவம். மிகப்பெரும் கொலைக்களமாகத் திகழ்ந்த ஆஷ்விட்ஸின் ஒவ்வொரு மண் துகளும் ரத்தம் தோய்ந்தது.

கொத்துக் கொத்தாக மனிதர்கள் கொல்லப்பட்ட ஆஷ்விட்ஸ் மரண முகாம் விடுவிக்கப்பட்ட நாள் நேற்று. ஹிட்லரின் நாஜிப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆஷ்விட்ஸ்-பிர்கெனோ மரண முகாம் விடுவிக்கப்பட்டதன் 75ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று போலந்தில் நடைபெற்றது.

உலகெங்கும் பாசிசத்தின் கோர முகம் வெளிப்பட்டு வரும் சூழலில் சுதந்திரத்தைக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது ஆஷ்விட்ஸ் நினைவுகள்.