உலகம்

“அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்” : நடவடிக்கைகள் எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை - சீன அதிபர்!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,800-க்கும் மேலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ் சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் அதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உலக முழுவதும் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தற்போது வரை எந்த புதிய பயனும் இல்லை என சீன அரசு சார்பில் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக, சீன அதிபர் ஜீ ஜின்பிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றோம். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

பாதிக்கப்பட்டவர்களை மீட்க அரசு பல மிக துரித நடவடிக்களை செய்து வருகிறது. ராணுவ மருத்துவர்களும் நோயாளிகளை கவனித்து வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க இரண்டு சிறப்பு மருத்துவமனைகள் விரைவில் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், உறுதியான நம்பிக்கையுடன், ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி, நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் துல்லியமான கொள்கைகளை செயல்படுத்தினால், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக ” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் செவிலியர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். செவிலியரின் வீடியோ பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் சீனா அரசு சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் சீனாவிற்கு உதவ முன்வரவேண்டும் என சர்வதேச தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: சீனாவுக்கு பயம்காட்டும் கொரோனா: வெறும் ஆறே நாட்களில் கட்டப்படும் பிரமாண்ட மருத்துவமனை - சீன அரசு தீவிரம்!