உலகம்
உணவளிக்கும் ஹெலிகாப்டர் : உயிர்ப்பிக்கும் ஆஸ்திரேலியா - சிதைந்த வனத்தை மீட்கப் போராடும் தன்னார்வலர்கள்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி, விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களைச் சுற்றி காட்டுத்தீ பரவி வருகிறது. இதன் காரணமாக சிட்னி பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் தெற்கு வேல்ஸ் பகுதியில் வசிக்கும் 70 லட்சம் மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையில் ஆஸ்திரேலிய காட்டுத் தீ காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, 15,000-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமானோர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மாகாண ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் வனவிலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காடுகளில் தீ பற்றியது தெரிந்ததுமே பறவையினங்களில் சில மட்டுமே தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைக்கப்பட்ட பின்பு, நியூ சௌத் வேல்ஸின் குல்நூரா என்ற பகுதியில் பாதிக்கப்பட்ட தனது வீட்டையும், நிலத்தையும் காண்பதற்காக, முரே லோவி என்ற நபர் சென்றுள்ளார்.
அங்கு அவரது நிலத்தின் அருகில் இருந்த காட்டில், தீயினால் எரித்து கரியாகிப்போன மரங்களின் பட்டைகளில் இருந்து, மீண்டும் செடிகள் வளரத் தொடங்கியுள்ளது. இதைப்பார்த்து உற்சாகமடைந்த முரே தனது கேமரா மூலம் அதனை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவிட்ட புகைப்படம் ஆஸ்திரேலியா மக்களை மட்டுமின்றி காட்டுத்தீயினால் துவண்டுபோன உலக மக்களையும் கவர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, காட்டுத்தீயினால் லட்சக்கணக்கான விலங்குகள் உயிரிழந்திருந்தாலும், இன்னும் பல லட்சம் விலங்குகள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டு பரிதவித்து வருகின்றன. மேலும், தங்களின் வாழ்விடம் சிதைந்துபோன நிலையில் உணவுக்காக பல விலங்குகள் காட்டைவீட்டு நகரத்திற்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், காடுகளில் உள்ள விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக, ஆஸ்திரேலியா மக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் வல்லபி என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
அந்த திட்டத்தின் படி, காட்டில் பிழைத்திருக்கும் உயிரினங்களுக்கு உணவு அளிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக ஆயிரம் கிலோ அளவிற்கு கேரட் மற்றும் கிழங்கு போன்ற விலங்குகள் உண்ணும் உணவை ஹெலிகாப்டரில் பறந்தபடி காடுகளில் கொட்டி வருகின்றனர்.
மேலும் காட்டில் சில பகுதிகளில் நீர் தொட்டிகள் மற்றும் விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏற்றதுபோல, சிறிய குளங்களை வெட்டி தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இந்தத் திட்டத்தில் இணைந்த மக்கள் மீண்டும் காடுகளை உயிர்ப்பிக்க தங்களால் முடிந்தளவுக்கு உதவிகளை செய்துவருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் செய்ய தன்னார்வலர்கள் குவிந்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!