உலகம்
1991ம் ஆண்டைப் போலவே இருக்கும் 2020 - உலக அரசியலின் ‘தேஜாவூ’ நிகழ்வு!?
2020ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் நடந்தேறிவரும் சில நிகழ்வுகள் 1991ம் ஆண்டை நினைவுபடுத்துகின்றன. உலகின் முக்கிய நிகழ்வுகள் அதேபோல மீண்டும் தற்போது நிகழ்ந்திருப்பது நமக்கெல்லாம் ‘தேஜாவூ’ போன்றதொரு உணர்வை அளிக்கின்றது என்றே சொல்லலாம்.
முதலாவதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்திருக்கிறது. அதோடு, ஜே.என்.யூ மாணவர்கள் விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோன்றே 1990-91ல் மண்டல் கமிஷனுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் இதேபோல பதற்றமான சூழல் நிலவியதை இன்றைய நிலையோடு ஒப்பிடலாம்.
அதே ஆண்டில், அதாவது சதாம் உசேன் ஈராக் அதிபராக இருந்த காலகட்டத்தில் வளைகுடா நாடுகளில் நிலவிய போர் பதற்றம் நிலவியது. இதனால், கச்சா எண்ணெய் விலை எக்குத்தப்பாக உயரும் நிலை உருவானது. இதேபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி பாக்தாத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கிறார். பின்னர் ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அயாத்துள்ளா அலி காமினி அமெரிக்காவின் செயலுக்கு பழி தீர்க்கப்படும் என்று கூறி, கடந்த இரண்டு நாட்களில் ஈராக் மற்றும் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தளவாடங்கள் ஈரானால் தகர்க்கப்பட்டுள்ளன.
ஈரானின் பதிலடிக்கு தக்க பதில் அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இதனால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு, போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
மூன்றாவதாக, அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் நமது பொருளாதார மந்தநிலையையும் இந்தப் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம். இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5% ஆகக் குறைந்துள்ளது. பொருளாதார வல்லுநர்களும் இதுகுறித்து அரசை எச்சரித்து வருகின்றனர்.
1991ல் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டை பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டையும் ஒப்பிட முடியாது என்றாலும், இப்போதைக்கு அதுபோன்ற அதிரடி பொருளாதாரக் கொள்கையே தேவைப்படும் சூழல் நிலவுகிறது.
இந்த மூன்று சங்கிலித் தொடர் சம்பவங்களும் நமக்கு ‘தேஜாவூ’ உணர்வை அளிக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- மா.வீரபாண்டியன்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?