உலகம்

ஃபேஸ்புக்கில் இருந்து 26 கோடி பேரின் தகவல்களைத் திருடி விற்ற ஹேக்கர்கள் - அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்களில் இன்றளவும் பயனாளர்கள் அதிகம் விரும்புவது ஃபேஸ்புக் தான். உலகம் முழுவதும் பேஸ்புக்கை பலகோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும், வர்த்தக தேவைகளுக்கும் இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது ஃபேஸ்புக்.

இந்நிலையில், ஃபேஸ்புக் பயனாளர்களில் 26 கோடி பேரின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வியட்நாமில் இயங்கிவரும் ஹேக்கர்கள் குழு ஒன்று சமீபத்தில் ஃபேஸ்புக் பயனர்களின் தகவலை திருடியதாக பிரிட்டனை சேர்ந்த மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஹேக்கர்கள் குழு ஃபேஸ்புக் பயனாளர்களில் 26 கோடி பேரின் அலைபேசி எண்கள் மற்றும் ஐடி போன்ற தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்து அதனை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், அந்த இணையதளத்தில் இந்த தகவல்களை வணிக விளம்பரங்கள், அரசியல் பிரசாரம் ஆகியவற்றிற்கு விற்பனை செய்வதற்காக வைத்துள்ளதாகவும், இதில் பெரும்பாலான பயனாளர்களின் ஐ.டிகள் அமெரிக்காவை சேர்ந்தவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை அடுத்து தகவல் திருடப்பட்டது குறித்து உரிய விசாரணை நடைபெறுகிறது என ஃபேஸ்புக் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

ஃபேஸ்புக் பயனாளர்களில் 26 கோடி பேரின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக வெளியான தகவல் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி அபராதம்! : ஏன் தெரியுமா?