உலகம்

வெளிநாடுகளிலும் தீவிரமடையும் போராட்டம் : மத பேதமின்றி குவிந்த மாணவர்கள் - பதட்டத்தில் பா.ஜ.க #CAAProtest

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதலில் ஈடுபட்டத்தற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இந்தப் போராட்டம் சர்வதேச நாடுகளிலும் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன்பு ஜாமியா மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கோல்டு ஸ்மித், வெஸ்ட்மின்ஸ்டர், கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்து என பேதமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். குடியுரிமை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

பா.ஜ.க.,வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களையே தொடர்ந்து இயற்றி வருகிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பேசுகையில், ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலைமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளிலும் இந்தப் போராட்டம் பரவத் துவங்கியுள்ளது மோடி அரசுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.