உலகம்

குற்றவாளிகளை பிடிக்கச்சென்ற 14 போலிஸார் பலி : மெக்ஸிகோவில் தொடரும் போதை கடத்தல் கும்பலின் வெறிச்செயல்!

மெக்ஸிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2006ம் ஆண்டு முதல் போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களுக்குப் போட்டியாக இருக்கும் எதிர்த்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போட்டியாளர்களைக் கொன்று குவிக்கும் வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மிக்கோகன் மாநிலத்தில் உருவாபன் என்ற நகரில் ஒரு பெரிய போதைக் கடத்தல் கும்பல், அதன் மற்றொரு தரப்பினரைக் கொன்று அவர்களில் 9 பேரின் சடலத்தை பாலத்தின் மீது தொங்கவிட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை சாலையோரம் குவித்து வைத்தனர்.

அதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 4 பேரை துண்டுதுண்டாக வெட்டி 119 பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களை தடுக்கச் சென்ற போலிஸாரையும் கும்பல் விட்டு வைப்பதில்லை. சமீபத்தில் காரில் சென்ற 14 போலிஸ்காரர்களை கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

கடந்த வாரத்தில், போதைக் கடத்தல் கும்பல் ஒன்று நியூ ஜாலிஸ்கோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் அவரது குழந்தையையும் கடத்திச் சென்றனர். அவர்களை உடனடியாக மீட்க காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதனையடுத்து மேற்கு மெக்ஸிகன் மாநிலமான மைக்கோவாகனில் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்த குழுவைத் தேடி 14 போலிஸ் அதிகாரிகள் துப்பாக்கியுடன் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

அகுயிலா என்ற பகுதியில் போலிஸ் வாகனம் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது மறைந்திருந்த போதைக் கடத்தல் கும்பல் போலிஸ் வாகனத்தின் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் தீப்பிடித்து இரண்டு போலிஸ் வாகனமும் வெடித்தது. அதில் இருந்த 10 போலிஸார் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் கொந்தளித்துப்போன காவல்துறை உயரதிகாரிகள் கடத்தல் கும்பலைச் சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “போதைக் கடத்தல் கும்பல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஆனால் அமெரிக்காவின் எல்லைகள் வழியாக அவர்கள் ஊடுருவி வருகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது” என்றார்.

மேலும் உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு, “மெக்ஸிகோவில் தற்போது வரை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களே தாக்கிக் கொண்டு சுமார் 2,966 படுகொலைகள் நடந்துள்ளதாகவும், அதேபோல் 2018-ல் 421 போலிஸ் அதிகாரிகளும், 2019-ல் ஆண்டில் இதுவரை 308 போலிஸாரும் கொல்லப்பட்டுள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் வன்முறையைத் தடுக்க அரசும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.