உலகம்
பெட்ரோல், டீசல் விலை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயரும் - சவூதி இளவரசர் எச்சரிக்கை!
சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.அரம்கோ மீதான தாக்குதலால் ஈரான் - சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானுக்கு எதிரான உலக நாடுகள் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில், பிரச்சனை விரிவடையும் என்று தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயரக் கூடும் என்றும், நமது வாழ்வில் கண்டிராத மற்றும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் விலை உயர்வு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். அப்படி விலை உயரும் பட்சத்தில், சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்தம்பித்து விடும் என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
அது நடக்கக் கூடாது என்று விரும்பினால், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில் ராணுவத்தை விட, அரசியல் மற்றும் அமைதி வழியில் தீர்வு காண்பது சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு