உலகம்

“ஒர் அணு ஆயுத போர் நடக்க வாய்ப்பு உள்ளது” ; ஐ.நா சபையில் இந்தியாவை எச்சரித்து பேசிய இம்ரான் கான்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். ஐ.நா கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசே முன்பே இம்ரான் கான் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்திய பிரதமர் மோடி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அப்போது, “நான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவுடன் நட்பு பேண பல முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அந்த முயற்சிகளை பிரதமர் மோடி நிராகரிக்கும் வகையில் எந்த சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லை” என்றார்.

மேலும், “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், அங்கு 80 லட்சம் மக்களை இந்தியா சிறை வைத்துள்ளது” என்று குற்றம்சாட்டிய அவர், “காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் உற்று நோக்க வேண்டும். அங்கு அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “நான் இந்த சூழலில் காஷ்மீரில் இருப்பதாக கற்பணை செய்து பார்க்கிறேன். குறிப்பாக 55 நாட்களாக வீட்டு சிறையில் அடைபட்டு, தினமும் கொடுமைகளை மட்டும் அனுபவித்து வந்தால் அங்கு எப்படி வாழ நினைப்பேன்?” என கேள்வி எழுப்பிய அவர், “ஒருவேலை காஷ்மீரில் இருந்தால் நானே கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன்” என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

பின்னர், “60 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் மனிதநேயமற்ற ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார். காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியே வந்தால் என்ன நடக்கும்? ரத்த ஆறுதான் ஓடும்” என்று இம்ரான் கூறினார்.

மேலும், இந்திய அரசு 5 ஆயிரம் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியதாக கூறுகிறது. நாங்கள் ஏன் அனுப்பபோகிறோம். இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இந்தியா தங்கள் மீது தேவையின்றி பழிபோடுவதாக இமரான் கான் குற்றம்சாட்டினார்.

இறுதியாக பேசும் போது, “உலக அளவில் ஒரு மிகப்பெரிய சந்தை இந்தியா என்பதால், அவர்கள் மீது சர்வதேச சமூகம் எந்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. மீண்டும் புல்வாமா போன்ற தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.

இதனை நான் அச்சுறுத்த தெரிவிக்கவில்லை. எச்சரிக்கையாக கூறுகிறேன். ஒர் அணு ஆயுத போர் நடக்க கூட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்கும் கடமை ஐ.நா சபைக்கு உள்ளது”. என அங்கு பேசினார். மேலும், இம்ரான் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை தாண்டியே தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.