உலகம்
'கிரேட்டா தன்பெர்க்' தெரியும் - 27 ஆண்டுகளுக்கு முன் உலகை உறைய வைத்த சிறுமி சுசுக்கியை தெரியுமா?
அண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலைக் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 16 வயதே ஆன இளம் சூழலியலாளர் கிரேட்டா தன்பெர்க், தனது பேச்சினால் உலக மக்களை விழிப்படையச் செய்துள்ளார்.
“பேரழிவின் விளிம்பில் இருக்கிறோம். அதனை உணராமல் நீங்கள் பொருளாதார வளர்ச்சியை பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என ஐ.நா காலநிலை தொடர்பான கூட்டத்தில் உலக நாடுகளின் மத்தியிலும் பேசியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றது.
சூழலியல் குறித்தும், உலகம் வெப்பமயமாதல் குறித்தும் பேசிய சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரேட்டாவுக்கு ஸ்வீடன் நாட்டின் ’ரைட் லைவ்லி ஹூட்’ என்ற அறக்கட்டளையால் வழங்கப்படும் வாழ்வாதார உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது நோபல் பரிசுக்கு நிகரான விருதாகக் கருதப்படுகிறது.
”நமக்கு நேரமில்லை. இன்று, இப்போதே இந்த பூமியின் சூழலை காக்கும் பணிகளை தொடங்க வேண்டும்” என்று பொருளாதாரத்தின் பின் செல்லும் உலக நாடுகளின் காதுகளில் உரக்க கத்துகிறார் கிரேட்டா. இந்த செவிட்டுக் காதுகளில் கத்துவது கிரேட்டா மட்டும் அல்ல. 27 ஆண்டுகளுக்கு முன் செவெர்ன் குலீஸ் சுசுக்கி என்ற சிறுமியும் சூழலியல் போராட்டத்துக்கான எச்சரிக்கை அழைப்பை விடுத்தார்.
உலக வெப்பமயமாதல் குறித்தும், சூழலியல் குறித்தும் கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரியோ நகரில் புவி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கனடாவைச் சேர்ந்த செவெர்ன் குலீஸ் சுசுக்கி என்ற 12 வயது சிறுமி பங்கேற்று உலகின் சூழலியல் நிலை குறித்து அந்த அரங்கில் இருந்த உலகத் தலைவர்கள் முன்னிலையில் தனது ஆதங்கங்த்தை ஆக்ரோஷ வார்த்தைகளில் எடுத்துரைத்தார்.
அதில், “எனக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லாத. என்னுடைய எதிர்காலத்துக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். எதிர்கால சந்ததிகளுக்காகவும் இங்கு பேச வந்திருக்கிறேன். தாவரங்களும், விலங்குகளும் நாளுக்கு நாள் அழிந்துக்கொண்டிருப்பதை நாம் கேட்டறிந்து வருகிறோம். என்னுடைய வயதில் நீங்கள் இருந்தபோது இது தொடர்பாக கவலையுற்றதுண்டா? இவை அனைத்து நம் அனைவரின் கண் முன்னே நடைபெற்று வருகிறது.”
“இருப்பினும் நாம் அனைவரும், எல்லாம் சிறப்பாகவே இருப்பதாகவும், எல்லா தீர்வுகளும் எளிமையாக கிட்டிவிடும் என்பது போலவே செயல்படுகிறோம். என்னால் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கண்டுவிட முடியாது, ஏனெனில் நான் வெறும் சிறுமிதான். உங்களால் இதற்கான தீர்வை எட்டமுடியாவிட்டால் உலகை உடைப்பதையாவது நிறுத்துங்கள்.” என்று சுசுக்கி பேசிய 5 நிமிடங்கள் "உலகை அமைதியாக்கிய 5 நிமிடங்கள்” என்று பெரும் கவனத்தை பெற்றது.
ஆனால், சுசுக்கியின் அந்த பேச்சு, ஒன்றும் அறியாத சிறுமியின் குரலாக உலக தலைவர்களின் காதுகளுக்குச் சென்று சேர்ந்ததே தவிர ஒரு மாற்றமும் இல்லை. 27 ஆண்டுகளாகிவிட்டது. இன்று கிரேட்டா பேசத் தொடங்கியிருக்கிறார். தற்போது நிலைமை பல மடங்கு மோசமாக உள்ளது. சுசுக்கியின் பேச்சில் இருந்து அச்ச உணர்வையும், தன் பூமி மீதான கரிசனத்தையும் கொஞ்சமேனும் புரிந்து கொண்டிருந்தால், சூழலியல் தற்போது சந்தித்துள்ள சீர்கேடுகளில் 50% குறைத்திருக்கலாம். காடுகள், பல விலங்கு, பறவை, பூச்சி இனங்களின் அழிவைத் தடுத்திருக்கலாம். மாசு படிந்த காற்றில் மாஸ்க் போட்டு நடக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
கிரேட்டா தனது உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார் “ நீங்கள் என் குழந்தை பருவத்தை திருடிவிட்டீர்கள். என் கையில் இருந்த புத்தகத்தை பறித்துவிட்டு, என்னை போராட வைத்துவிட்டீர்கள்” என்கிறார். இது கிரேட்டாவின் மனநிலை மட்டும் அல்ல. உலகில் வாழும் குழந்தைகள் இந்த மன நிலையில் தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அழகிய குழந்தை பருவத்தை, பறித்துவிட்டது தாராளமயம் என்ற பேராசை.
கிரேட்டாவின் ஆதங்கத்துக்கு இனி பதில் கிடைக்குமா? இல்லை சுசுகியின் பேச்சைப் போல, செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கப் போகிறதா? என்பதில் தான் உலகின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!