உலகம்

44 பேரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கொடூரம் : போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்!

மெக்ஸிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களுக்குப் போட்டியாக இருக்கும் எதிர்த்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போட்டியாளர்களைக் கொன்று குவிக்கும் வன்முறை சம்பவத்தை நிகழ்த்தி வருகின்றனர்.

அப்படி தற்போதும் ஒரு கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். மெக்ஸிகோவின் மேற்கு ஜாலிஸ்கோ மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள குவாடலாஜா என்ற பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில் அதிக துர்நாற்றம் வீசியுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் கிணற்றைச் சுற்றி சோதனை செய்தனர். அப்போது கிணற்றுக்குள் இருந்த பிளாஸ்டிக் பைகளை எடுத்துப் பார்த்தபோது மனித உடல் பாகங்கள் கிடந்துள்ளன. அதனையடுத்து கிணற்றுக்குள் இருந்த 119 பிளாஸ்டிக் பைகளை எடுத்தனர். அதில், 44 பேரின் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளன.

மேலும், கொலை செய்யப்பட்ட 44 பேர் யார் யார் என அடையாளம் காணும் பணியில் போலிஸார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் மெக்ஸிகோவின் மிக்கோகன் மாநிலத்தில் உருவாபன் என்ற நகரில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. ஒரு பெரிய போதைக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினரைக் கொன்று அவர்களில் 9 பேரின் சடலத்தை பாலத்தின் மீது தொங்கவிட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை சாலையோரம் குவித்து வைத்தனர்.

இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் வன்முறையைத் தடுக்க அரசும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.