உலகம்

காடுகளை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் : 700 கி.மீ., பின்னோக்கி நடந்து விழிப்புணர்வு பிரசாரம் !

உலகம் முழுவதும் காடுகளை அழித்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாப வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்தக் காடுகளை அழிக்கும் நடவடிக்கைக்கு அரசும் உடந்தையாக இருப்பதாக பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

காடுகளை அழிக்கும் நடவடிக்கை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தோனேசியாவில் ஒருவர் பின்னோக்கி நடந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தைச் சேர்ந்தவர் பாஸ்டோனி. 43 வயதான பாஸ்டோனி சமூக ஆர்வலராக உள்ளார். ஜூலை 18-ம் தேதி கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள எரிமலை மவுண்ட் வில்லிஸில் உள்ள தனது கிராமத்தில் காடு அழிப்பால் பாதிக்கப்பட்டார்.

அதனைத் தடுக்க பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மக்களுக்கும் அரசுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எண்ணி 700 கி.மீ (435 மைல்) பின்னோக்கி நடக்க முடிவு எடுத்தார்.

அதன்படி பாஸ்டோனி பின்னோக்கி நடத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாஸ்டோனி கூறுகையில், "இந்த விழிப்புணர்வு மூலம் அரசாங்கம் சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்படத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். இளம் தலைமுறையினர் நமது சூழலைப் பற்றி அக்கறை காட்டுவார்கள்.

சமீபத்தில் கிரீன் பீஸ் அமைப்பு அறிக்கையில், உலகில் அதிகம் காடழிப்பு நடைபெறும் பகுதியில் இந்தோனேசியாவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது. ஜப்பானை விட இரண்டு மடங்கு பெரியது, அதாவது சுமார் 74 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை நிச்சயம் தடுக்கவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்த மாத இறுதியில் ஜகார்த்தாவுக்கு வரும்போது ஜனாதிபதி ஜோகோ விடோடோவை சந்தித்து காடுகள் அழிப்பட்டு வருவதைத் தடுக்க கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.