உலகம்

20 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் தற்போது மாட்டிக்கொண்ட கொலைகாரன் : சிக்கியது எப்படி ?

அமெரிக்காவில் சோண்ட்ரா என்ற மூதாட்டியின் கொலை வழக்கில் 20 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளியை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகணத்தில் சோண்ட்ரா பேட்டர் என்ற 68 வயதான மூதாட்டி 1998ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த மூதாட்டி அவர் வேலை செய்த கடையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் கிடைத்த துப்புகளை வைத்து விசாரித்தபோது, சோண்ட்ரா உயிரிழப்பதற்கு முன்பு அந்த கடைக்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அந்த நபர் குறித்த தெளிவான புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை. வந்துசென்ற நபரின் கை ரேகை மற்றும் ரத்த மாதிரிகள் மட்டுமே கிடைத்தன.

அதனை வைத்து விசாரணையில் ஈடுப்பட்ட போலிஸார் அந்த நபரைக் கண்டுபிடிக்காமல் தவித்துள்ளனர். பின்னர் காலப்போக்கில் அந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டு முடங்கிப் போனது.

பார்கெட்

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பார்கெட் என்பவர் மருத்துவனை ஒன்றில் பணிபுரிய விண்ணப்பத்துள்ளார். அந்த வேலைக்கு அவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது கை ரேகை பரிசோதனைக்காக அனுப்பட்டது.

பரிசோதனை மையம் கை ரேகையை சோதனை செய்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய நபரின் கை ரேகையும் இந்த கை ரேகையும் ஒத்துப்போவதாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, பரிசோதனை மையம் கொடுத்த தகவலைக் கொண்டு போலிஸார் பார்கெட் குறித்து விசாரித்தனர். பின்னர் அவரைக் கைது செய்து டி.என்.ஏ பரிசோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் சோண்ட்ரா கொலை வழக்கில் கிடைத்த டி.என்.ஏ மாதிரியும், பார்கெட்டின் டி.என்.ஏ மாதிரியும் ஒத்துப்போனது.

இதனையடுத்து கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறி பார்கெட்டை கைது செய்து போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து தப்பித்த கொலையாளி தற்போது மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.