உலகம்

ஜப்பான் எப்போதுமே ஹைடெக் தான் - ஒலிம்பிக் பதக்கத்தை எதைக் கொண்டு உருவாக்கியுள்ளது தெரியுமா?

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டில் நடைபெற இருக்கிறது. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களை ஒலிம்பிக் கமிட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் என்ன ஆச்சர்ய தகவல் என்றால், எலெட்ரானிக்ஸ் பொருட்களின் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி மூலம் ஒலிம்பிக் பதக்கங்களை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய முயற்சியை பலதரப்பினரும் பாராட்டி வியந்து வருகின்றனர்.

இந்த ஒலிம்பிக் பதக்கத்தை செய்வதற்கு சுமார் 32 கிலோ தங்கம், 3 ஆயிரத்து 500 கிலோ வெள்ளி மற்றும் 2 ஆயிரத்து 200 கிலோ வெண்கலம் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதற்காக சுமார் 78 ஆயிரத்து 500 கிலோ அளவிலான எலெக்ட்ரானிக் பொருட்களை சேகரித்துள்ளனர். குறிப்பாக 62.1 லட்சம் (6.21 மில்லியன்) செல் போன் கழிவு பொருட்களை இதில் சேர்த்துள்ளனர்.

இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மறு சுழற்சி மூலம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பிரேசில் நாடு தாயரித்துள்ளது. ஆனால் அதில் தங்கம் மற்று வெள்ளியை வெறும் 30 சதவீத மறு சுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டன.

ஆனால் ஜப்பான் அதற்கும் மேல் ஒரு படி சென்று 100 சதவீதமும் மறு சுழற்சி முறையில் கிடைத்த உலோகங்களை மட்டுமே பயன்படுத்தி பதக்கங்களை தயாரித்துள்ளது.

மேலும் இந்த மறுசுழற்சி தொடர்பான தகவலை 2020 ஒலிம்பிக் கமிட்டி அதன் வலைதளப்பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளனர். அதில் இந்த மறுசுழற்சி திட்டத்தின் மூலம் பதக்கங்களை செய்வதற்கு மூன்று ஆண்டுகள் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.