உலகம்
இங்கிலாந்து புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் மூவருக்கு முக்கிய பொறுப்புகள் : காரணம் இதுவா?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக 3 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அறிவித்தது. பொது வாக்கெடுப்பில் ஆதரவு கிடைத்தபோதிலும், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே ஆகிய பிரதமர்கள் பதவியிழந்துள்ளனர்.
இதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தது இந்தியா. ஆனால், இப்போது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் அரசில் அமைச்சர்களாக இந்திய வம்சாவளியினர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல் எனும் பெண் தான் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரிட்டனின் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் உள்துறை அமைச்சர். இதேபோல, முன்பு இணையமைச்சர் பொறுப்பில் இருந்த அலோக் சர்மா, இப்போது கேபினட் அந்தஸ்துடன் சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் முன்னாள் மருமகன் ரிஷி சுனக் நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சஜித் ஜாவீத் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கடுத்த பொறுப்பில் அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்கும் அதிகாரத்தோடு ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் 1.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிரதமராக பதவி ஏற்றுள்ள போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரினா வீலர் என்பவரை மணந்திருந்தார். கடந்தாண்டு அவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. தன்னை இந்திய மருமகன் எனக் கூறிக்கொள்ளும் போரிஸ் ஜான்சன் இந்தியப் பாசத்தைக் காட்டும் விதமாகவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!