உலகம்

வேட்டைக்காரரின் கைகால்களை உடைத்து உணவுக்காக குகையில் வைத்திருந்த கரடி : உண்மையில் நடந்தது என்ன?#FactCheck

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் துவா மலைப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற சிலர், குகை ஒன்றில் இருந்து உடல்நிலை பாதிகப்பட்ட ஒரு நபரை மீட்டு வந்ததாகவும், வேட்டைக்காக வந்த அந்த நபரை கரடி ஒன்று கை கால்களை உடைத்து உணவுக்காக வைத்திருந்ததாக ஒரு புகைப்படமும், செய்தியும் வெளியானது.

இந்த செய்தியை உலகில் உள்ள பல முன்னணி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு இருந்தன. பின்னர் இந்தியாவிலும் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. இதனையடுத்து இந்த செய்தி குறித்த உண்மைத் தகவல்களை ‘தி சன்’ என்கிற ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் அலெக்சாண்டர் என்றும், அவர் குறித்து வெளிவந்த புகைப்படம் குறித்த தகவலும் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தடிப்புத் தோல் அழற்சி நோயால் பாதிக்கபட்டவர் என்றும், அவர் எந்த மிருகத்தாலும் தாக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் அலெக்சாண்டர் தற்போது உடல்நிலை சரியாகி அவரது குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் குறித்த அனைத்து தகவல்களையும் மருத்துவர் கூறிய கருத்துகளையும் அந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்பிறகே, கரடி தாக்கியதாக வெளியான செய்தி உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.