உலகம்
பாரசீக வளைகுடாவில் தோட்டாக்கள் பாய்ந்தால் எண்ணெய் விலை 100 டாலராக உயரும்: ஈரான் எச்சரிக்கை
ஈரான் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு விருப்பம் இல்லாததால், ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை, உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா கடந்த மே 16-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது. மேலும் ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நோக்கத்தில் படைகளை அனுப்பி வருவதாக அமெரிக்கா காரணம் கூறுகிறது.
இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியதாக சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரான் எங்களுடன் போரிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்துவிடும். அதுவே அந்நாட்டின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும். அவர்கள் மீண்டும் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது" என மிரட்டல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து ஈரான் ராணுவ ஆலோசகரான யாஹ்யா ரஹீம் சபாவி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தூரத்தில் தான் அமெரிக்க போர் விமானங்கள், கப்பல்கள் உள்ளது. எங்கள் ஏவுகணைகள் துல்லியமாக செல்லும்.
இது பற்றி பாரசீக வளைகுடாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க மற்றும் வெளிநாட்டுக் கடற்படையினருக்கு தெரியும். அதிலும் ஈரானின் பலம் என்னவென்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பாரசீக வளைகுடாவில் முதல் குண்டு விழுமாயின், எண்ணெய்யின் விலை 100 டாலருக்கு மேலாக உயரும். அதாவது இந்திய மதிப்பில் 7 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படும். இந்த உயர்வு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெரிய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் எந்தவித அவசர நடடிக்கைகளும் மேற்கொள்ளமாட்டார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை நடத்த தயார் என இரண்டு நாடுகளின் சார்பில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது. ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் மோதல் போக்கே தொடர்கிறது. அமெரிக்கா பிராந்திய நாடுகளை தன்னிச்சையாக இயங்க விடாமல் செயல்படுவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!