Viral
காந்திக்கு பதில் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ நடிகர் அனுபம் கேர்... குஜராத்தில் ரூ.1.60 கோடி கள்ளநோட்டு.. பின்னணி?
பாஜக ஆளும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மானெக் சவுக் என்ற பகுதியில் தங்கக் கடை நடத்தி வருபவர் மெகுல் தக்கர். இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கும்பல் வந்து, 2,100 கிராம் தங்கம் வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். மேலும் அதனை செப்.24-ம் தேதி அன்று நவரங்புரா பகுதியில் உள்ள CG சாலையில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து டெலிவரி செய்யப்படும் நாளன்று, அந்த கும்பல் இருக்கும் இடத்திற்கு, தனது ஊழியர்களை தங்கத்துடன் அனுப்பி வைத்துள்ளார் மெகுல் தக்கர். பின்னர் அந்த ஊழியர்கள் தங்கத்தை அந்த கும்பலிடம் கொடுத்து விட்டு, பிளாஸ்டிக் கவரில் பணத்தைப் பெற்றுள்ளனர். அந்த கவரில் ரூ.1.3 கோடி ரொக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பணத்தை பணம் எண்ணும் இயந்திரத்தில் எண்ணிக்கொண்டு இருக்குமாறும், மீதம் 30 லட்சத்தை பக்கத்து கடையில் வசூலித்துவிட்டு வருவதாகவும் கூறி அங்கிருந்து அந்த கும்பல் தப்பித்துள்ளனர். இதனிடையே பிளாஸ்டிக் கவரை திறந்து பார்த்த ஊழியர்கள், அதில் போலி ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து இதுகுறித்து தங்கள் உரிமையாளர் மெகுல் தக்கரிடம் ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து, நவரங்புரா காவல் நிலையத்திற்கு சென்று உடனடியாக புகார் கொடுத்துள்ளனர். அந்த கும்பல் கொடுத்த கோடி ரூபாய் பணத்தின் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதில், காஷ்மீர் ஃபைல்ஸ் பட நடிகர் அனுபம் கேரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.
மேலும் அதில் Reserve Bank of India' என்பதற்கு பதிலாக ’Resole Bank of India' என்றும், 'State Bank of India' என்பதற்கு பதிலாக 'Start Bank of India' என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸார் விசாரணையில், தங்கம் டெலிவரி செய்யப்பட்ட கொரியர் நிறுவனத்தின் இடமானது, ஒப்பந்தமின்றி எடுக்கப்பட்ட வாடகை இடம் என்றும், ஓரிரு நாட்களில் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக நில உரிமையாளரிடம் உறுதியளித்து கடையை வாடகைக்கு எடுத்து கொரியர் நிறுவனத்தின் போலி பலகையை அந்த கும்பல் அங்கு வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதுபோன்ற போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ஏமாற்றப்படுவது இது முதல் முறையல்ல. இதே குஜராத்தின் சூரத் நகரில் கடந்த செப்.22-ம் தேதி போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரிக்கையில், ஷாகித் கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘Farzi’ வெப் தொடரை பார்த்து செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.1.20 லட்சம் போலி நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!