Viral

தடை அதை உடை : நீதிமன்றம் சென்று போராடி மருத்துவரான 3 அடி உயரம் கொண்ட இளைஞர்!

தமக்கான உரிமைகளுக்குப் போராடினால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் 3 அடி உயரம் கொண்ட கணேஷ் பாரையா என்ற இளைஞர். தற்போது மருத்துவராக இருக்கும் இவருக்கு இந்த இடம் எளிதில் கிடைத்துவிட வில்லை.

இதற்காகப் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து தனது லட்சியத்திற்காகப் போராடி தனது மருத்துவர் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவரது வாழ்க்கையைச் சற்று திரும்பிப் பார்ப்போம்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பரையா. இவருக்கு வயது 23. ஆனால் 3 அடி உயரம் கொண்டவர். பிறக்கும் போதே குள்ளத்தன்மையுடன் பிறந்த இவரின் உடலில் 72% லோகோமோட்டிவ் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இவர் குள்ளமாக இருப்பதால் பள்ளி படிப்பில் சகமாணவர்கள் போல் இவரால் சகஜமாக இருக்க முடியவில்லை. பலர் கேலி கிண்டல்கள் செய்துள்ளனர். இருந்தும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் பள்ளி படிப்பை வெற்றி கரமாக முடித்துள்ளார்.

பின்னர் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ஆனால் இவரின் உயரத்தைக் காரணமாகக் கூறி இந்திய மருத்துவ கவுன்சில் MBBS படிக்கத் தகுதியற்றவர் என கூறியது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு 2 ஆண்டுகள் நடந்தும் கணேஷ்க்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து கணேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதில் உச்சநீதிமன்றம் MBBS படிக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு MBBS பட்டப்படிப்பில் சேர்ந்தார். தற்போது இவர் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு பாவ்நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். தனது உரிமைக்காகப் போராடினால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் பலருக்கு நம்பிக்கையாகவும் கணேஷ் பரையா இருக்கிறார்.

Also Read: 100 டெஸ்ட் போட்டிகள் : 13 ஆண்டுகளாக தொடரும் சகாப்தம்... சரித்திர சாதனை படைத்த தமிழ்நாடு வீரர் அஸ்வின் !