Viral

சுடிதார் To LipStick... காதலிக்காக பெண் வேடமணிந்து போட்டி தேர்வுக்கு சென்ற இளைஞர் - சிக்கியது எப்படி?

பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான தேர்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் அம்மாநிலத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த போட்டித் தேர்வானது, டிஏவி பப்ளிக் பள்ளியிலும் நடைபெற்றது.

அப்போது பரம்ஜித் கவுர் என்ற இளம்பெண் ஒருவரும் தேர்வு எழுத வந்துள்ளார். கை நிறைய வளையல்கள், உதட்டில் லிப் ஸ்டிக், நெற்றியில் பெரிய பொட்டு என அந்த பெண் காட்சியளித்தார். தொடர்ந்து தேர்வுக்காக சோதனைகள் நடைபெற்றது.

அப்போது அவரிடம், அவரது வாக்காளர் அடையாள அட்டை, தேர்வு ஹால் டிக்கெட் உள்ளிட்டவை இருந்துள்ளது. இவை அனைத்தையும் சரி பார்த்த பின் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு பெரிய ட்விஸ்ட் வைக்கும் விதமாக வேறு ஒரு சோதனையும் நடைபெற்றது.

அதாவது, இந்த தேர்வுகள் அனைத்தும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டிருந்ததால், தேர்வர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகைகளை வைக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் திகைத்து போன அவர், உடனே திருதிருவென முழித்துள்ளார். பின்னர் அதிகாரிகள் அவரை கட்டாயப்படுத்தி விரலை வைக்க கூறியுள்ளனர்.

இதனால் அவரும் வேறு வழியின்றி வைத்துள்ளார். அப்போது அவரது ரேகை பதிவாகவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அது பெண் இல்லை, ஆண் என்று அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலிசுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் விசாரிக்கையில், இந்த ஆள் மாறாட்டத்தை தனது காதலிக்காக செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதாவது, பஞ்சாபில் அமைந்துள்ள ஃபாசில்கா என்ற பகுதியை சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் அங்ரேஸ் சிங் ஆகும். இவரும் பரம்ஜித் கவுர் என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இந்த தேர்வுக்கு தனது காதலிக்க்கு பதிலாக அங்ரேஸ் சிங், காதலி போல் தோற்றத்தை உருவாக்கி ஆள் மாறாட்டம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலி ஆவணங்களை தயாரித்து மோசடியாக தேர்வு எழுத முயன்றதாக அங்ரேஷ் சிங் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடமும் அவரது காதலியிடமும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி போல் வேடம் அணிந்து காதலியின் தேர்வை எழுத வந்த காதலனின் செயல் தற்போது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: பீகார் To டெல்லி : ஓடும் இரயிலில் வெந்நீர் வைத்த நபர்... அபராதம் விதித்த இரயில்வே அதிகாரிகள் !