Viral

பீகார் To டெல்லி : ஓடும் இரயிலில் வெந்நீர் வைத்த நபர்... அபராதம் விதித்த இரயில்வே அதிகாரிகள் !

பீகார் மாநிலம் காயா பகுதியில் இருந்து டெல்லிக்கு மகாபோதி எக்ஸ்பிரஸ் இரயில் நாள்தோறும் செல்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று இந்த இரயில் புறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் 36 வயதுடைய வாலிபர் ஒருவர், தான் கொண்டு வந்த கெட்டிலில் வெந்நீர் போட எண்ணியுள்ளார். அதற்காக இரயிலில் இருக்கும் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தியுள்ளார்.

பொதுவாக சார்ஜிங் பாயிண்டில் அதிக வோல்ட்டேஜ் இருக்கும் மின் சாதங்களை பயன்படுத்த கூடாது என்று ஒரு விதி உள்ளது. ஆனால் அதையும் மீறி இந்த நபர் கெட்டிலில் வெந்நீர் போட்டுள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த இரயில்வே அதிகாரி, இதனை பார்த்து கண்டித்துள்ளார். மேலும் அவருக்கு ரூ.1000 அபராதமும் விதித்துள்ளார்.

70 வயது மூதாட்டி ஒருவர் மாத்திரை சாப்பிடுவதற்காக வெந்நீர் தேவைப்பட்டதால் இரயிலில் உள்ள உணவு பட்டறையில் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தர மறுத்ததால் கெட்டிலில் வெந்நீர் வைத்ததாகவும் அந்த வாலிபர் விளக்கம் கொடுத்தார். இருந்த போதிலும், அதிகாரி இந்த செயலை கண்டித்து அபராதம் விதித்தார்.

மேலும் சார்ஜிங் பாயிண்டில் மொபைல் சார்ஜை தவிர வேறு உயர் மின் சாதங்களை பயன்படுத்தினால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அந்த நபரை அனுப்பினர். இந்த சம்பவத்தால் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: விமானம் புறப்படுவதில் சற்று தாமதம்... அறிவிப்பு வெளியிட்ட ஊழியரை தாக்கிய பயணி... காரணம் என்ன ?