Viral

பெரியாரின் வார்த்தையே நிலவில் நீர் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது: வைரலாகும் மயில்சாமி அண்ணாதுரை video

தந்தை பெரியார் இன்று இல்லை என்றாலும் அவர் சொன்ன கருத்துக்கள் இன்றும் எல்லாத்துறைகளிலும் பிரதிபலித்தே வருகிறது. குறிப்பாக அறிவியல் துறையில் அவரது கருத்துக்கள் எந்த அளவிற்கு ஆழமாக விதை போட்டுள்ளது என்பது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும் வீடியோ என்று நமக்கு எல்லாம் உணர்த்துகிறது.

சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெரியாரும் அறிவியலும் என்ற தலைப்பில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்துவரை வழங்கினார். அப்போது பேசிய அவர், "யார் சொல்லி இருந்தாலும், எங்குப் படித்து இருந்தாலும் என் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

இதைதான் தந்தை பெரியார், "உன் சாத்திரத்தை விட உன் முன்னோரை விட உன் வெங்காயம் வெளக்கமாத்த விட உன் அறிவு பெரிது அதை சிந்தி" என்று சொல்லி இருக்கிறார். பெரியாரின் இந்த கருத்துதான் எனது நிலவுப் பயணத்தின் அடித்தளம். எனது முகவரி சந்திரயானாக இருந்தாலும் பெரியாரின் இந்த வார்த்தைதான் அதற்கு விதையாகவும் அடையாளமாகவும் இருந்தது.

எனது சிறுவயதில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்குச் சென்று கற்களையும், மணலையும் கொண்டு வந்தார். அதன் பிறகு சுமார் 99 பயணங்கள் நிலவில் நடந்துள்ளது. இதன் முடிவுகளில் நிலவில் நீர் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. சாஸ்திரத்திலும் நிலவில் நீர் இல்லை என்று எழுதப்பட்டுவிட்டது.

ஆனால் பூமியில் தண்ணீர் இருக்கும் போது நிலவில் மட்டும் எப்படி தண்ணீர் இல்லாமல் இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வி எழுவதற்குக் காரணம் பெரியார்தான். அவரது வார்த்தைகள்தான். இதுதான் சந்திரயான் 1 திட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது. பின்னர் நாம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.சாத்திரங்களாக இருந்தாலும் அறிவியல் கட்டுரைகளாக இருந்தாலும் அதை அப்படியே நம்பக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”TNPSC தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமில்லை” : ஊடகங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு!