Viral

ரூ.1000 வந்தாச்சு.. ரூ.15 லட்சம் எப்ப வரும்?.. பிரதமர் மோடி மற்றும் பாஜகவிடம் கேட்கும் தமிழ்நாட்டு மக்கள்

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டது. இதனால் தி.மு.க அரசை எதுவும் குறைசொல்ல முடியாமல் இருந்ததால், அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை என்னானது என கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாங்கள் சொன்னது மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டியுள்ளோம். நிச்சயம் நாங்கள் சொன்ன வாக்குறுதிப்படி ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்" என அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் இத்திட்டத்திற்காக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 24.7.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து நாளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில் இன்றே மகளிர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மகளிர் அனைவரும் மகிழ்ச்சியடைந்து தங்களது வீடுகளில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோலமிட்டுக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் எங்கள் முதலமைச்சர் சொன்னதைச் செய்துவிட்டார். அவர் சொன்னபடி ரூ.1000 வங்கியில் வந்தாச்சு.. பிரதமர் மோடியும் தான் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார். இவர்கள் ஆட்சியே முடியப்போகிறது. ஆனால் இதுவரை பணம் வந்துசேரவில்லை. நீங்கள் சொன்ன ரூ.15 லட்சம் எப்ப வரும்? என பா.ஜ.கவிற்கும் பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பி சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Also Read: ”இந்தி திணிப்பை இதோடு அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்”.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!