Viral

தடை அதை உடை.. மகளுடன் PUC தேர்வில் வெற்றி பெற்ற 5 குழந்தைகளின் தாய் : கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதைக் கர்நாடகாவில் நடந்த சம்பவம் ஒன்று மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்திற்குட்பட்ட சூளை ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கீதா. இவர் 1994ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) தேர்வில் தேர்ச்சி பெறாததால் தனது பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து குடும்ப வாழ்க்கையில் நுழைந்த இவர் கணவன், குழந்தைகள் வீடு என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு வந்துள்ளது. இந்த ஆசையை அடுத்துக் கடந்த 2021ம் ஆண்டு தனது மகளுடன் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ஊர்காவல் படையில் வேலை கிடைத்தது. மேலும் PUC தேர்வை எழுத பலரும் ஊக்கப்படுத்தின்ர். அதன்படி கடந்த ஆண்டு தனித்தேர்வராக PUC தேர்வு எழுதினார். ஆனால் தோல்வியடைந்தார்.

இந்த தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மீண்டும் இந்த ஆண்டு PUC தேர்வு எழுதினார். இவரது மூன்றாவது மகளும் PUC தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதில் தாயும், மகளும் PUC தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்துக் கூறும் கீதா,"எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற்ற பிறகு PUC தேர்வு எழுதலாமா? வேண்டாமா? என்று குழப்பம் இருந்தது. காரணம் எனக்கு 3 பெண்கள் மற்றும் 2 இரண்டு ஆண் குழந்தைகள் 5 பேர் உள்ளனர். குடும்ப வேலைகள் அதிகம் இருந்தது. இருந்தாலும் என் பிள்ளைகள் உட்படப் பலரும் என்னை ஊக்கப்படுத்தினர். தற்போது தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: ’ஒன்றிய அரசுக்கு நெருக்கமானவன்’.. பிரதமர் மோடி படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்த உ.பி. வாலிபர் கைது!