Viral

“திஹார் to பிக்பாஸ் வீடு.. 500 இடங்களில் கொள்ளை” : திருடர் குல திலகம் ‘பன்டி சோர்’ பற்றி சுவாரஸ்ய தகவல் !

தமிழ் மற்றும் இந்தி போன்ற சில சினிமா படங்களில் வரும் திருடனின் சாதுரிய காட்சிகள் நிஜ திருடனை வைத்து மையமாக எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு தேவேந்தர் சிங் என்ற திருடனின் வழக்கைப் பற்றி படிக்கும் போது நமக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு திருட்டுத்தொழிலை கச்சிதமாக செய்து முடிப்பவராக வலம் வந்துள்ளார் தேவேந்தர் சிங்.

‘பன்டி சோர்’ என்று அழைக்கப்படும் திருடன்தான் தேவேந்தர் சிங். சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில், தேவேந்தர் சிங் தனது கைவரிசையை காட்டிவிட்டு, போலிஸில் சிக்காமல் தப்பித்ததாகக் கூறப்படுகிறது. உதாரணமாக கடந்த 1994ல் சென்னையில் நடத்த முக்கிய திருட்டு வழக்கில், தமிழ்நாடு போலிஸ் தேவேந்தர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அங்கே சிறையில் இருந்த ஓரிரு நாட்களிலேயே பல்லியை கடித்து தின்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தேவேந்தர் சிங்கை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருக்கும் போது மருத்துவப் பயன்பாட்டுக்காக இருந்த ஊசியை பயன்படுத்தி கைவிலங்கை கழட்டிவிட்டுத் தப்பித்துள்ளார்.

சென்னையில் மட்டுமல்லாது மும்பை சிறையில் இருக்கும் போது, போலிஸாரிடம் லாபகரமாக பேசி அவரின் இருசக்கர வாகனத்தை வாங்கி ஓட்டிவிட்டு கொடுப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். அப்படி ஒருநாள் இருசக்கர வாகனத்தை ஓட்டுகையில், வாகனத்தோடு மாயமாகியுள்ளார் தேவேந்தர் சிங். அதேபோல் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டபோது, தனது காரிலேயே வருவதாகவும், காரை தள்ளிவிடும் படி கூறி, போலிஸாரிடமிருந்து அப்படியே தப்பிச் சென்றுள்ளார்.

தேவேந்தர் சிங் விலையுர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்துள்ளார். அதுமட்டுமல்லாது திருடிய பணத்தில் தோழியுடன் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி பல நாட்கள் உல்லாசமாக செலவழிப்பதாகவும், பணம் தீர்ந்தவுடன் மீண்டும் ஏதாவது நகரத்திற்குச் சென்று கொள்ளையடிப்பதையும் தனது வாடிக்கையாக வைத்துள்ளார்.

அப்படி ஒருமுறை தமிழ் சினிமாவின் ‘நந்தா’ திரைப்படத்தில் வரும் ‘லொடுக்கு பாண்டி’ போல, நீதிபதியின் வீட்டிலேயே கொள்ளையடித்துவிட்டு அங்கேயே பில்டர் காபியும் குடித்துவிட்டுச் சென்றுள்ளார். அதேபோல், வடிவேலு காமெடியில் வருவதுபோல 100 வது திருட்டை கூட்டாளிகளோடு கொண்டாடியுள்ளார்.

மேலும் பதற்றப்படாமல் சமாளிக்கும் வித்தை தெரிந்த தேவேந்தர் சிங் ஒருமுறை ஒரு பணக்கார பெண்மணி வீட்டில் கொள்ளையடித்துவிட்டு வெளியே திரும்பியுள்ளார். அப்போது அந்த பெண் கண்முழித்துப் பார்த்தபோது, சிரித்த முகத்துடன், கனிவாக குட்மார்னிங் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அவரது முகத்தை பார்க்கும் போது சந்தேகமே வரவில்லை, அவ்வளவு சாந்தமாக இருந்தது என அந்த பெண் போலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்யும் தொழிலை நேர்த்தியாக செய்யும் எண்ணம் கொண்ட தேவேந்தர் சிங், வீட்டில் இருக்கும் நாயைக் கட்டுப்படுத்தும் தந்திரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார். அதாவது ஆண் நாயாக இருப்பின், கைவசமிருக்கும் பெண் நாயின் சிறுநீர் நனைத்த கைக்குட்டையை பயன்படுத்தி சாந்தப்படுத்துவாராம். இதற்காக தனியாக கால்நடை மருத்துவரிடம் பயிற்சி பெற்றுள்ளார் தேவேந்தர் சிங்.

கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டிய தேவேந்தர் சிங் சிக்கியது என்னவோ குறைவான வழக்கில்தான். இதனாலேயே ‘பன்டி சோர்’ என்று இவரை கடவுளாக வழிபடும் திருடர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். இவரின் கதையை மையமாக வைத்தே இந்தியில் ’ஓயே லவ்லி; லவ்லி ஓயே’ திரைப்படம் உருவானதாக அண்மையில் அதன்படக்குழு தெரிவித்திருந்தது.

பின்னர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் இருந்த தேவேந்தர் சிங், பிணையில் வெளியே வந்தபோது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் பேசுபொருளானது. இப்படி திருவிளையாடல்களுக்கு மத்தியில் பழைய வழக்கு ஒன்றிற்காக தேவேந்தர் சிங்கை உத்திரப்பிரதேச போலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் டெல்லி கைலாஷ் நகர் திருட்டுகளுக்காக டெல்லி போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பல முறை டெல்லி போலிஸாருக்கு டாடா காட்டியதால் இம்முறை கூடுதல் பாதுகாப்போடு அழைத்துச் செல்லவும் அவரிடம் பேச கூடாது எனவும் போலிஸாருக்கு உயரதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர். இறுதியாக தேவேந்தர் சிங்கிற்கு சொந்தமான வீடோ பொருளோ வங்கி கணக்கோ எதுவும் இல்லை. அவை இருந்தால் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்பதால் அவற்றை தேவேந்தர் சிங் தவிர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கர்நாடக முதல்வர் 1500 கோடி ஊழல் செய்தார்.. சொந்த கட்சி MLA-வின் புகாரால் அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள் !