Viral
வீட்டின் கழிவறை பக்கெட்டுக்குள் கிடந்த பிஞ்சு குழந்தை.. ஓடி சென்று மருத்துவமனையில் சேர்த்த கேரள போலிஸ் !
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் அமைந்துள்ளது செங்கனூர். இங்கு இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, இரத்த போக்கும் ஏற்பட்டு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை இறந்துவிட்டதாக எண்ணிய அந்த பெண், அதனை கழிவறையில் உள்ள வாளியில் போட்டுள்ளார்.
பின்னர் குழந்தை பிறந்ததற்கு பிறகு இரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் அந்த பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே சிகிச்சை பெற்று வந்தபோது, தனக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை இறந்து விட்டதால் கழிவறையில் வீசியதாகவும் மருத்துவமனையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அங்கே கழிவறையில் பக்கெட்டில் இருந்த குழந்தையை பார்த்துள்ளனர். அப்போது அதற்கு உயிர் இருந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பிஞ்சு குழந்தையை பக்கெட்டுடனே தூக்கி கொண்டு மருத்துவமனை வரை ஓடினர்.
பின்னர் அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அந்த குழந்தைக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த பெண் இந்த குழந்தையை முறையற்ற முறையில் பெற்றெடுத்து அதனை வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த குழந்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அந்த பெண் யார், அவருக்கு திருமணமானதா அல்லது காதல் மூலம் பிறந்த குழந்தையா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற குழந்தையை வீட்டின் கழிவறை வாளிக்குள் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவறை வாளிக்குள் வைக்கப்பட்டிருந்த பிறந்த சில நிமிடங்களே ஆன உயிரோடு இருந்த குழந்தையை போலீசார் உடனடியாக மீட்டு நெடுந்தூரம் ஓடி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ள காவல் துறையினரின் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!