Viral
“காதலரை தேர்ந்தெடுக்க புரிதல் அவசியமா? - புரிதலுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன ?” : சிறப்புக்கட்டுரை!
காதலரை தேர்ந்தெடுப்பதெனில், காதலை பற்றிய உங்கள் புரிதலிலிருந்து தொடங்க வேண்டும். சிலருக்கு காதலெனில் எப்போதும் அருகே இருந்து காதலுரைகளை வழங்கியபடி இருப்பது. இன்னும் சிலருக்கு தூரச் சென்றாலும் நம்பிக்கையுடன் ஒருவருக்கு ஒருவர் பற்றிக் கொள்வது.
வேறு சிலருக்கு ஒற்றை இலக்கு நோக்கிய ஒருமித்த பயணம். 25 வயதுக்கு உட்பட்டவரெனில் சினிமாத்தன (filmy) உறவை விரும்புபவராக இருக்கலாம். பலருக்கு திருமணத்துக்கு முன்னால் அழகு, படிப்பு, வேலை ( சில நேரங்களில் சாதி, மதமும் உள்ளடக்கிய :)) தன் விருப்பத்துக்கான இணை தேர்வு. இதில் எதுவுமாக உங்களின் விருப்பம் இருக்கலாம். இவையன்றி வேறொன்றாகவும் இருக்கலாம்.
சூட்சுமம் என்ன தெரியுமா?
காதல் சார்ந்து ஒரு புரிதல் அல்லது ஒரு விருப்பம் கொண்டிருக்கும் நீங்கள் அந்த புரிதலையும் விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்யும் காதலரும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள். அதே தளத்தில் உங்கள் காதலரின் புரிதலும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறீர்கள்.
உங்களின் விருப்பப்படியே உங்களின் புரிதலை பகிர்ந்து கொள்ளும் காதலர் வந்தாலும் பிரச்சினைகள் நேரும் என்பதுதான் சூட்சுமம்.
இணையர் தேர்விலும் கூட இந்தச் சூழல்தான் மிஞ்சும்.
என்னதான் செய்வது?
அடிப்படையில் முக்கியமான புரிதல் உறவுக்குள் தேவை. எந்தக் காதலுறவாக (நாமே தேர்ந்தெடுப்பதாக) இருந்தாலும் பிரச்சினைகளும் முரண்களும் நிச்சயமாக வரும் என்கிற புரிதல்!
லட்சியப்பூர்வமான காதல் செய்வதால் சண்டைகள் தோன்றாது என எண்ணிக் கொண்டால் ஏமாற்றமே மிஞ்சும். அந்த ஏமாற்றம் இன்னும் வன்மத்தைக் கூட்டி பிரிவை நோக்கி உங்களை தள்ளும்.
முரண் என்பது மனிதச் சமூகத்தின் இயல்பு. மனிதப் பரிணாமத்துக்கும் சிந்தனைக்குமே அடித்தளமாக இருப்பதும் இருந்ததும் முரண்தான். எனவே இரு நபர் ஒன்றாகுகையில் முரண் நிச்சயமாக நேரும். சிக்கல்கள் வரும். அகங்காரம் (ego) தீண்டப்படும். வார்த்தைகள் வெடிகுண்டுகள் ஆகும். மோதல்கள் போர்களாக இருக்கும். வலி எந்த எல்லைக்கும் உங்களை தள்ள யத்தனிக்கும்.
இந்த சூழல் காதலில் குறைவாக இருக்கலாம். காரணம் இரு வேறு வீட்டில் இருப்பீர்கள். திருமணத்தில் அதிகமாகவே இருக்கும்.
மனித சமூகத்தின் ஒரு சூட்சுமம் உண்டு. அனைவருக்கும் சக மனிதருடன் முரண் இருக்கும். ஆனால் சக மனிதரின்றி வாழ முடியாது. எந்த முரணை உங்கள் வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் காதலை மட்டுமல்ல, உங்களின் அரசியலையும் தீர்மானிக்கவல்லது.
பெரும்பாலும் காதலுறவுகளை தொடங்கும் தம்பதியிடம் பேசுகையில் நான் சொல்லும் உத்தி ஒன்றுதான். முதல் முத்தம், முதல் அணைப்பு, முதல் உறவு எல்லாம் இயல்பாகவே நேர்ந்து விடும். ஆனால் முதல் சண்டையை நாம் முடிந்த மட்டிலும் ஒத்திப் போடுவோம். கோபத்தை மறைப்போம். சூழல்களை சகித்துக் கொள்வோம். ஏனெனில் சண்டை நம்மை அம்பலப்படுத்தி உறவை நாசமாக்க் விடுமோ என்கிற பயம். 'முதல் சண்டை போட்டு விட்டீர்களா?' என்பதே என் கேள்வியாக இருக்கும்.
முதல் சண்டையில் எல்லா ஒப்பனைகளையும் அழித்தி பல ஆயுதங்களை திரட்டி இருவரும் நின்று கொண்டு மோதுவோம். அந்தச் சண்டை எப்படி முடிகிறது, யார் முடித்து வைக்கிறார்கள், முடிந்தாலும் அது எந்தளவுக்கு மனதில் பாதுகாத்து வைக்கப்படுகிறது போன்ற பல விஷயங்களை கொண்டுதான் உங்களின் உறவின் எதிர்காலத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
இதற்காக partner-ஐ தேர்வு செய்யும் உங்களின் முயற்சியில் யாரையேனும் பார்த்து பிடித்துவிட்டால் நேரே சென்று சண்டை போடுங்கள் என சொல்லவில்லை.
எவரை பிடித்தாலும் let the love happen. காதல் பற்றிய விருப்பத்தை பகிர்ந்து கொள்வாரா என யோசிக்காதீர்கள். பகிர்ந்து கொண்டாலும் பிரச்சினை வரும். ஒரே விஷயம், உங்களின் புரிதல் வேறாக இருந்தாலும் பிரச்சினை இல்லை என அதற்கான space-ஐ பரஸ்பர மரியாதையுடன் கொடுக்கக் கூடிய இணையாக இருந்தால் நல்லது. அது மட்டுமே உங்களின் எதிர்பார்ப்பாக - பெரிய எதிர்பார்ப்பெனினும், இருக்கலாம்.
ஆகவே முரண்களை ஏற்று, space கொடுத்து பரஸ்பர மரியாதை அளிக்கக் கூடிய இணையர் எனில் நல்லது. ஆனால் அத்தகைய சிந்தனை முதிர்ச்சி கொண்டவர்கள் குறைவு என்பதால், எதிர்பார்ப்புகள் பெரிதாக இன்றி இணை தேடிக் கொள்வது உங்களுக்கு நல்லது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !