Viral

அப்போ ரயில் எஞ்சின்.. இப்போது தண்டவாளம்: பயன்படாத ரயில் நிலையங்களை குறிவைத்துத் திருடும் கும்பல்!

பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் க்ரஹாரா என்ற ரயில் நிலையத்தில் பயன்படுத்தாமல் இருந்த டீசல் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி மர்ம நபர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கழித்து தற்போது 2 கிலோ மீட்டருக்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் இருந்து லோஹாட் சர்க்கரை ஆலைக்கு செல்ல ஒரு வழித்தடத்தைக் கிழக்கு ரயில்வே அமைத்திருந்தது. இந்த வழியாக ரயில் மூலம் சர்க்கரைகள் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது. பின்னர் இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இதனால், இந்த தண்டவாளம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த ரயில் பாதையை ஸ்கிராப்புக்கு ஏலம் விடப்பட்டது. அப்போது அதிகாரிகள் அங்குச் சென்று ஆய்வு செய்தபோது, 2 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தண்டவாளம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகுதான் ரயில்வே அதிகாரிகள் உதவியுடன் தண்டவாளத்தை மர்ம நபர்கள் திருடி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்குக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பீகாரில் தொடர்ச்சியாகவே பயன்படுத்தாத ரயில் நிலையங்களை குறிவைத்து ரயில் எஞ்சின் மற்றும் தண்டவாளங்கள் திருடப்பட்டு வருவது ரயில்வே துறையை பீதியடைய வைத்துள்ளது.

Also Read: வங்கியில் புகுந்து ஊழியர் கன்னத்தில் பளாரென அடித்த வாடிக்கையாளர்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!