Viral
“friends with benefits - relationship”: காதலுறவுகளில் புதுக்காதல் உருவாக்கும் பரிமாணங்கள் என்ன தெரியுமா?
இன்றைய சூழலில் காதலுக்கு பொதுச்சமூகத்தில் வெவ்வேறு அர்த்தங்கள், வடிவங்கள் வந்துவிட்டன. பிறன் மனை நோக்கலை காதலுறவாக சுட்டும் தன்மைகளும் இருக்கின்றன. அவற்றை நியாயப்படுத்தும் எழுத்துகளும் நபர்களும், படைப்புகளும் இருக்கின்றன. மேலும் fling, Friends with Benefits, One night stand, Blind Date, Extra Marital Affair, Polygamy போலவை பல வகைகளில் சில வகைகள்.
இவை யாவும் இருக்கிறதா, இல்லையா, இருந்ததா, சரியா, தவறா, பண்பாடா, இல்லையா எனப் பலவகை விவாதங்களும் நடைபெறுகின்றன. பெரும்பாலான இந்த விவாதங்களுக்கு பின் வரலாறோ சமூக வளர்ச்சியோ இருப்பதைக் காட்டிலும் தனி மனித விருப்பங்களும் திட்டங்களும் தன்முனைப்புகளும் அதிகம் இருக்கின்றன.
எனவேதான் இன்றையச் சூழலில் காதலுறவு என்பதை நாம் புதுவிதமாக வரையறுக்க வேண்டியிருக்கிறது. உலக மூலதனத்தை கொண்டு வரும்போது கூடவே உலக பண்பாடுகளும் சேர்ந்துதான் வரும்.
என்னதான் பண்பாடு, குடும்பம் என நம்மூர் கட்டுமானங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்தினாலும் ஏதோ ஒரு தருணத்தில் பிற வாழ்க்கைச்சூழல், ரசனை சார்ந்த காதல் மற்றும் மண உறவுகளை ரகசியமாகவேனும் விரும்பும் தன்மையைத்தான் சூழல் கொண்டிருக்கிறது. ஆகவே யதார்த்தத்தை ஏற்று என்ன செய்வதென ஆலோசிக்கலாம் என்பதே என் யதார்த்தம்.
மேலும் இத்தகைய சிந்தனைப் போக்குகள் உலகின் பல நாடுகளில் வெவ்வேறு சமூகப்போக்குகளின் விளைவாக தோன்றியவையாக இருக்கும். குறிப்பிட்ட ஒரு நாட்டில் திருமணத்துக்கு முன் ஒன்றாக வாழுதல் இயல்பாக இருக்கிறதெனில் அங்கு அதற்கான சமூகப் பொருளாதாரச் சூழலை வரலாறு வழங்கியிருக்கும்.
அதன் விளைவாகவே அத்தகைய முறை உருவாகியிருக்கும். ஆனால் நம் சூழலின் வரலாற்று பண்பாட்டு பின்னணி வேறொன்றாக இருக்கையில், அச்சூழலை நாம் கையாள விரும்பும்போது புதுவகை சிக்கல்கள் உருவாகும். அதற்கேற்ப மனம், உறவு, குடும்பம், சமூகம் ஆகியவை தயார் செய்யப்பட்டிருக்காது. ஆகவே அவை பண்பாட்டு அதிர்ச்சியாகவே நேரும்.
உறவுகளில் உள்ள இத்தகைய மாறுபட்ட போக்குகள் நம் சமூகத்துக்குள் கலை இலக்கியம் வழியாகவே அறிமுகமாகும். திட்டியோ வரவேற்றோ எழுத்துகள் வரத் தொடங்கும். அவை சார்ந்து நம் சிந்தை மெல்ல தகவமையத் தொடங்கும்.
எழுத்துகள் ஒரு புது வாழ்க்கையை போற்றுகையில் அதற்கான சமூக ஏற்பை அரசியல் ரீதியாக உருவாக்கவென முனைப்புகள் நடக்கும். செயற்பாட்டாளர்களும் அறிஞர்களும் அத்தகைய வழிகளை சார்ந்து விவாதிப்பார்கள். முரண்படுவார்கள். கருத்தாடல்களை உருவாக்குவார்கள்.
அத்தகைய கருத்தாடல்கள் சமூகத்தில் கலக்கும்போது அவற்றை ஏற்கும் போக்கும் மறுக்கும் போக்கும் உருவாகும். ஏற்கும் போக்கு என்னவென தெரியாமல் சாகச உணர்வில் ஏற்கும். மறுக்கும் போக்கு அடுத்த கட்ட சமூக வளர்ச்சியை தடுக்கும் பிற்போக்கு நிலையில் மறுக்கும். ஆனால் யதார்த்தம் என்னவெனில் பொருளாதாரம் எந்த திசையில் ஓடுகிறதோ அத்திசையில்தான் கருத்தாடல்களும் ஓடும் என்பதே.
ஆண்களுக்கு இத்தகைய சூழல் ஒரு வசதியை கொடுக்கிறது. தங்களின் குடும்பத்தையும் பகைக்காமல், புதுக் காதலையும் நுகரவென அவர்கள் friends with benefits, one night stand அல்லது just relationship என்கிற பாணிகளை காதலுறவுக்கு கொடுத்து கொள்கிறார்கள். இவை சார்ந்து எழுதப்படும் இலக்கியமும் முன்னெடுக்கப்படும் அரசியலும் புதுக் காதல் சூழல் உருவாக்கும் பல பரிணாமங்களை பொருட்படுத்துவதில்லை.
காதலிப்பவர்தான் பாவம். ஆர்வத்துடம் இறங்கிவிட்டு ஏறத் தெரியாமல் திணறுவார்கள். காதலுறவுக்கான பரிணாமத்தில் வெவ்வேறு காதல் தன்மைகளில் பயணித்து ஒரு காதலுறவுதான் சரி என்கிற நிலையை நாம் எட்டியிருக்கிறோம். அதைத் தாண்டி போவது அக மற்றும் புறச்சிக்கல்களை கொடுக்கும்.
சிலர் விருப்பம் சார்ந்தும் வேட்டை மனத்துக்காகவும் ஆண் திமிருக்காகவும் சாகச விருப்புக்காகவும் பல உறவு, ஒரே நேரத்தில் நிறைய உறவு என பல வகை காதலுறவுகளை அரசியல் நியாயங்களை பூசி முயலலாம். ஆனால் நம் சிந்தையின் தகவமைப்புக்கு ஒருவரில் காதல் நாடுவதே நிம்மதிக்கான வழியாக இருக்கிறது. பிறவை பெரும்பாலும் குழப்பங்களும் தனிமையும் பதற்றமும் பயமும் கையறுநிலையும் கொடுக்க வல்லவையாக இருக்கின்றன.
எனவே காதலில் குழப்பம் இருப்பதில்லை. காதலர்களிடம் குழப்பம் இருக்கிறது. காதலர்களை உருவாக்கும் சமூகத்தில் இருக்கிறது. காதலை எளிமையாகவும் இயல்பாகவும் புரிந்து கொள்ள முதலில் சமூகத்தை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் பரிணாமத்தை புரிந்து கொள்ளுங்கள். சில பல காதல்களை செய்து அடிபட்டு காதலை புரிந்து கொள்ளுங்கள்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !