Viral
காதலும், கலவியும் வேறு வேறு.. இந்த அடிப்படை புரிதல் கோளாறை காதலர்கள் கடப்பது எப்படி?
கலவி என்பது கொச்சை வடிவம் என கருதினால் காதல் அதன் உயர்ச்சி வடிவம்.
காதல் அற்புதம் என கருதினால் கலவியே அதன் ஆழம்.
சங்க இலக்கியம் பாடிய பசலை நோய் தலைவனை காண்பதற்காக மட்டுமே அன்று என்பதை புரிந்துகொள்ள முடியும். காதலை கடல் என்று கொண்டால் கலவியே கரை. கரை இல்லாமல் கடல் இருக்காது. கரை இல்லையெனில் கடல் வடிவம் கொள்ளாது.
ஆனால் இங்கு உள்ள பிரச்சினை இந்த இரண்டையும் பற்றி உள்ள குழப்பம்தான். மனித மனம் இயங்குவது ஆதியையும் அந்தத்தையும் கொண்டுதான். ஆதி மூளை என கொண்டால் அந்தம் என்ன என புரியுங்கள். இந்த குழப்பமே கலவியில் ஏற்படும் காதல் விரயமாக இருக்கிறது.
ஒன்று, பார்ன் வீடியோக்களை பார்த்து செயற்கை அதீதம் விரும்பி முடமாகிக் கொள்கிறோம். அல்லது, தமிழ்ப்படங்களின் மேலோட்ட காதல் காட்சிகளைக்கூட பார்க்காமல் குனிந்துகொண்டு அறியாமைக்குள் வீழ்கிறோம். இரண்டுமே இரு எக்ஸ்ட்ரீம்கள். ஆபத்தான இருமுனைகள்.
உங்கள் பார்ட்னரிடம் நீங்கள் விரும்பும் காதல் இயல்பை சொல்லி பாருங்கள். பெண்ணாக இருந்தால் 'சீ' என்றும் ஆணாக இருந்தால் சந்தேகப் பார்வையும் பதில்களாக வரும். அந்த பதிலில் இருந்துதான் விரயம் தொடங்குகிறது.
இதை எப்படி கடப்பது?
Open Communication தான். ஆனால் இங்கு ஆண், பெண் உறவுக்குள்ளேயே மனம் விட்டு பேசுதலை தடுக்கும் சமூக கட்டமைப்பை வைத்துக்கொண்டு, கலவியை பற்றிய open communication எங்கிருந்து நேரும்?
அவசரமும் அதிருப்தியும் விருப்பமின்மையும் குற்றவுணர்ச்சியும் போதாமையும் மட்டுமே இங்கு கலவியின் சூழலாக இருக்கிறது. பாதசாரியின் மீனுக்குள் கடல் நாவல் முக்கியமான நாவல். அதில் வரும் காசி கதாபாத்திரம்தான் நாம் எல்லாம். முடிந்த மட்டிலும் அவனின் அகச்சிக்கலில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள புறக்காரணிகளை தேடி தொலைந்து போகிறோம்.
நாவலில் வரும் காசி, ஓரிடத்தில், அநேகமாக சாமியாரோ மருத்துவரோ என நினைக்கிறேன், தன் போதாமையை, தாழ்வு மனப்பான்மையை, மனக்குமைச்சலை, eccentric நடத்தையை சொல்லி தீர்வு கேட்கையில், எப்போது அவன் கடைசியாக கலவி கொண்டான் என அவர் கேட்பார். இல்லையென்றதும் முதலில் 'அதை செய்' என சொல்லி அனுப்புவார். ஓஷோவும் இப்படித்தான் சொல்வார்.
ப்ராய்டிய அணுகுமுறை என்று கூட கொள்ளலாம். ஆனால் கலவியில் திருப்தி கொள்ளவில்லை எனில், உங்களுக்கு கோபம், வெறுப்பு, குற்றவுணர்வு என எல்லா எதிர்நிலை எண்ணங்களும் பற்றி கொள்ளும். ஒரு வகையில் ஒட்டுமொத்த சமூகமும் குற்ற மனநிலையில் இருப்பதற்கு காரணமாக கூட இதை சொல்லலாம்.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை, புரிதல் கோளாறுதான். காதலும், கலவியும் வேறு வேறு என கற்பிக்கப்பட்டதுதான். காதல் வேண்டுமானால் நெற்றி முத்தத்தில் தொடங்கலாம். ஆனால் அது முழுமையடைவது முத்தத்தால் மட்டும் அல்ல. இங்கு முத்தத்துக்கே தடா என்பதுதான் சூழல்.
காதலும் புரியாமல், கலவியும் புரியாமல், உறவும் புரியாமல், எதுவும் தெரியாமல், காதலிக்கிறோம். கல்யாணம் செய்கிறோம். குழந்தை பெறுகிறோம். அதையும் வளர்க்கிறோம். எத்தனை சமூகவிரோத விஷயம் இது?
மெல்ல மெல்ல இப்போதுதான் Good touch, bad touch, பூப்பெய்துதல், ஈரக்கனவுகள் போன்ற விஷயங்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும் என பேசி வருகிறோம். அதுவும் சில குடும்பங்களில்தான் நடக்கிறது.
விரயம் பெருநஷ்டம் என போதிக்கும் நாம் கலவியில் நேரும் காதல் விரயத்தை எப்போது பேச போகிறோம்? சமூகத்தை குற்ற மனநிலையில் இருந்து எப்போது விடுவிக்க போகிறோம்?
முதலில் அந்தத்தை கவனிப்போம். ஆதி தானாகவே சரியாகி விடும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!