Viral

பாப் மார்லியின் பேரன் 31 வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி: காரணம் என்ன?

'இசை'யை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதை உலகிற்கு முதலில் செய்து காட்டியவர் பாப் மார்லிதான். இசை மூலம் விடுதலை என்ற நெருப்பை ஐமைக்காக நாட்டு இளைஞர்கள் மனதில் விதைத்தவர் இவர். இந்த இசை என்ற ஆழுதம் தான் பாப் மார்லியை உலகம் அறிய வைத்தது. 'ஜட்ஜ்நாட்', 'சிம்மர்ஸ் டவுன்', 'சோல் ரெபல்ஸ்' போன்ற அவரின் இசை ஆல்பங்கள் இப்போதும் புகழ்பெற்றவை.

தனது 36வது வயதில் ஜமைக்காவின் இசையான 'ரெக்கே' என்ற இசையை உலகெங்கும் பரப்பிவிட்டு உயிரிழந்தார். இப்போது வரை இவரது மரணம் மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் பாப் மார்லியின் பேரனும் தனது 31 வயதில் மர்மமாக உயிரிழந்துள்ளார். இவரும் இசைக் கலைஞர்தான். 1991ம் ஆண்டு ஜமைக்கா தலைநகரான கிங்ஸ்டனில் பிறந்தார் ஜோ மெர்சா மார்லி.

இவர் 2010ம் ஆண்டு 'மை கேர்ள்' என்ற ஆல்பம் மூலம் 'ரெக்கே' இசை உலகத்திற்கு அறிமுகமானார். பிறகு 'பேட் சோ' என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து 'எடர்னஸ்' என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம்தான் இவரை உலகம் முழுவதும் கொண்டு சென்றது.

இந்நிலையில் ஜோ மெர்சா மார்லி உயிரிழந்து விட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஆனால் அவர் எப்படி உயிரிழந்தார் என்ற காரணம் தெரிவிக்கவில்லை. இதனால் அவரது மரணம் மர்மமாக உள்ளது. ஜோ மெர்சா மார்லி-யின் மரணத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read: Veg Biryani-ல் கறி துண்டு.. பிரபல உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலிஸ்: நடந்தது என்ன?