Viral

என்னடா புதுசு புதுசா கிளம்புறீங்க.. திருமணத்திற்கு பெண் கேட்டு போராட்டம் நடத்திய 90S கிட்ஸ்கள்!

நாம் அரசியல் கட்சிகள் முதல் தனிநபர் உரிமைக்கான போராட்டங்கள் வரை என பல விதமான போராட்டங்களைப் பார்த்திருப்போம். ஆனால் எப்போதாவது எங்காவது திருமணத்திற்குப் பெண் வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோமா?. ஆனால் தற்போது இப்படியான ஒரு போராட்டம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்குத் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் இருந்து வருகிறது. நிரந்தர வேலை இல்லை, அரசு வேலை இல்லை, விவசாயம் என பல்வேறு காரணங்களைக் காட்டி பெண் வீட்டினர் இவர்களுக்கு பெண் கொடுக்க மறுத்து வருகின்றனர்.

இதனால் விரக்தியடைந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, திருமணத்திற்கு பெண்கள் வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தின்போது வாலிபர்கள் மணமகன்களை போன்று உடைகளை அணிந்திருந்தனர். மேலும் சிலர் குதிரைகளில் அமர்ந்து மணமகன் போன்று ஊர்வலமாக வந்தனர். பிறகு ஆட்சியர் அலுவலகம் வந்த இவர்கள் தங்களின் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் குறித்துப் பேசிய ரமேஷ்,"நாட்டில் பெண்களின் விகிதம் குறைந்து வருகிறது. கேரளாவில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் மகாராஷ்டிராவில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதிலும் குறிப்பாக சோலாப்பூர் மாவட்டத்தில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் திருமணத்திற்குப் பெண்களே கிடைப்பதில்லை. எனவே எங்களுக்குத் திருமணத்திற்குப் பெண்கள் வேண்டும்.

இந்த போராட்டம் தற்போது எல்லோருக்கும் கிண்டலாக இருக்கலாம். ஆனால் ஆண்- பெண் விகிதாச்சாரம் மாறுபட்டு இருப்பதாலே ஆண்களுக்குத் திருமணம் நடப்பதில் பிரச்சனை உள்ளது என்பதுதான் உண்மை" என தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த போராட்டத்திற்கு ஒரு புறம் ஆதரவும் மற்றொரு புறம் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

Also Read: யாருக்கும் கிடைக்காத பெருமை.. உலகக்கோப்பை வென்றுகொடுத்த மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜெண்டினா அரசு திட்டம் !