Viral

திடீரென வெடித்து சிதறிய மாணவர்கள் தயாரித்த ராக்கெட்.. கண்காட்சியில் 11 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: VIDEO

ஜார்க்கண்ட் மாநிலம் கட்ஸில்லா என்ற பகுதியில் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ - மாணவிகள் தங்கள் படைப்புகளை அனைவர் முன்பும் செய்து காட்டினர். அப்போது அங்கு பயிலும் ஒரு மாணவியும் - மாணவனும் தாங்கள் கண்டுபிடித்த ராக்கெட் ஒன்றை அனைவர் முன்பும் காட்சி படுத்தினர்.

மேலும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கினர். அப்போது அவர்களை சுற்றி சக மாணவர்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராக்கெட்டின் கேபிளை ஒன்றாக சேர்ந்தபோது, திடீரென அந்த ராக்கெட் வெடித்தது.

இந்த வெடி சம்பவத்தில் அந்த மாணவர்களை உட்பட அருகில் சுற்றி வேடிக்கை பார்த்த சக மாணவர்கள் என மொத்தம் 11 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த கல்லூரி நிர்வாகம் அவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் இக்கட்டான நிலைமையில் இல்லை என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராக்கெட் வெடித்தது தொடர்பான வீடியோ அதனை ஷூட் செய்த கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ தொடர்பாக சமூக ஆர்வலர் பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மாணவர்களின் அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தயாரித்த ராக்கெட் வெடித்ததில் மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளது ஜார்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக மாற்றப்படுகிறது -நாடாளுமன்றத்தில் பாஜக MP பகிரங்க குற்றச்சாட்டு !