Viral

உலக அதிசயமான Eiffel Tower-ஐ திருமணம் செய்து கொண்ட 50 வயது பெண்.. நம்ம முடிகிறதா உங்களால்?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஐஃபல் டவர் என்னும் இந்தக் கோபுரம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஒரு நபர் இருக்கிறார். வித்தியாசமானவர். அவர் மட்டும் இந்தக் கோபுரத்தை காதலிக்கிறார்.

உலக அதிசயமான ஐஃபல் டவரை காதலிப்பவரின் பெயர் எரிக்கா. அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவை சேர்ந்தவர். மிக சமீபமாகத்தான் ஐஃபல் டவருடன் காதலில் விழுந்தார். மிகச் சமீபமாக என சொல்வதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் அதற்கு முன்னும் அவர் காதல்வயப்பட்டிருக்கிறார்.

உதாரணமாக பெர்லின் சுவரை பற்றி எரிக்கா இப்படி சொல்கிறார்:

“பெர்லின் சுவர் ஓர் அற்புதமான படைப்பு. காதலிக்கப்படுவதற்கு அந்தச் சுவர் எவ்வளவு ஏங்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என சொல்லியிருக்கிறார்.

2006ம் ஆண்டில் ஐஃபல் டவரை மணம் முடித்துக் கொண்டார் எரிக்கா. தன் பெயரை கூட எரிக்கா ஐஃபல் என மாற்றிக் கொண்டார்.

கோபுரத்தின் அமைப்பு அற்புதமாக இருக்கிறதாம். அதன் நளினமான வளைவுகள் மிகவும் அழகாக அமைந்துள்ளதாம். ஐஃபல் டவரின் மீதான காதலுக்கு எரிக்கா சொல்லும் காரணங்கள் இவை. ஐஃபல் கோபுரத்தை காதலிப்பதற்கு முன் எரிக்கா ஒரு வில்லை காதலித்தார். அந்தக் காதல்தான் அவரை பெரிய வில் வீராங்கனையாக மாற்றியதாக குறிப்பிடுகிறார்.

இப்படியும் நடக்குமா? யாருக்கோ எவருக்கோ நடக்கும் விஷயமாக இதை நாம் பார்த்துவிட முடியாது. இவருக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதே உண்மை.

வாழ்க்கைகளில் மனிதர்கள் முக்கியமல்ல என்கிற கட்டத்தை எட்டியிருக்கிறோம். விளைவாக மனித உறவுகளை தவிர்க்கத் தொடங்கிவிட்டோம். மனிதர்களுக்கான இடங்களை பொருட்கள் நிரப்பிக்கொண்டன. ஒரு மனிதனின் மனதுக்கு மிக நெருக்கமான காதலுறவுக்கும் மனிதர்கள் அல்லாத விஷயங்களை நாடும் நிலையில் மனிதச் சமூகம் இருக்கிறது.

பொருட்கள் மீது கொண்டிருக்கும் உரிமை, நாளடைவில் உறவாகவே மாறுகிறது.

உதாரணத்துக்கு உங்களிடமிருக்கும் செல்ஃபோன் பறிபோய்விட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். உங்கள் மொத்த வாழ்க்கையும் முடங்கிப் போய்விடும். அல்லது முடங்கிப் போனதாக நினைத்துக் கொள்வீர்கள். உண்மையில் ஒரு செல்ஃபோனால் உங்கள் வாழ்க்கை முடங்கிப் போய்விடாது. அதிகபட்சம் செல்ஃபோனில் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளின் தொலைபேசி எண்கள் திரும்பக் கிடைக்காது. அவ்வளவுதான். செல்ஃபோன் கொண்டிருக்கும் நண்பர்களின் பெயர்களில் ஒருவரைப் பிடித்துவிட்டால் கூட போதும். அவரிலிருந்து உங்களின் பிற நண்பர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக நீங்கள் மீண்டும் அடைந்துவிட முடியும். கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் செல்ஃபோன் தொலைந்து போய்விட்டால் நாம் அடைகிற பதட்டம் எத்தகையதாக இருக்கும்?

’கையே உடைஞ்சு போயிட்டா மாதிரி ஆயிடுச்சு’ என்றெல்லாம் கூட சொல்லி இருக்கிறோம். செல்ஃபோனுக்கும் நம் உடலின் ஒரு பாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் கையும் ஒன்றா? செல்ஃபோனை விட நம் கை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா? ஆனால் கையை விட அதிக முக்கியத்துவத்தை செல்ஃபோனுக்கு கொடுக்கிறோம் என்பதே நிகழ்கால யதார்த்தம்.

செல்ஃபோனை கையாகவும் மணிப்பர்ஸை உயிராகவும் பார்க்கும் பழக்கம்தான் வளர்ந்து ஏதோவொரு கட்டடத்தை காதலராக பார்க்கும் தன்மைக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது.

ஐஃபல் டவரை காதலித்த எரிக்காவை பொறுத்தவரை அவரின் தன்மைக்கு மருத்துவ உலகம் object sexuality குறைபாடு என கூறுகிறது. அதாவது பொருள் மீது கொள்ளும் ஈர்ப்பு என மொழிபெயர்க்கலாம்.

இந்த குறைபாட்டினால் எரிக்கா இழந்தது அதிகம்.

பொருட்கள் மீது எரிக்கா கொள்ளும் ஈர்ப்பால் அவரின் தாய் எரிக்காவை விட்டுச் சென்றுவிட்டார். வில் பயிற்சிக்கு பண உதவி செய்யவிருந்த பல நிறுவனங்கள் வில்லுடன் எரிக்கா கொண்ட ஈர்ப்பு வெளிப்பட்டதும் அவரை விட்டகன்றன. உச்சக்கட்டமாக இன்னொரு இழப்பை சொல்கிறார் எரிக்கா.

ஐஃபல் கோபுரத்தை எரிக்கா மணம் முடித்த ஒரு வருடத்துக்கு பிறகு ஓர் ஆவணப்பட இயக்குநர் அவரை அணுகியிருக்கிறார். ஐஃபல் கோபுரத்துடனான அவரின் காதலைப் படமாக்க விரும்புவதாக சொல்லியிருக்கிறார். எரிக்காவும் அவரை நம்பி சம்மதித்திருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களில் படத்தின் இயக்குநர் ஐஃபல் கோபுரத்தின் மீதான எரிக்காவின் ஈர்ப்பை பாலுறவு ஈர்ப்பு என்பது போல் சித்தரிக்க முயன்றிருக்கிறார். அந்தப் படத்தில் எரிக்கா கோபுரத்துக்கு முத்தம் கொடுப்பது போன்று காண்பித்திருக்கிறார். அதை கூட ஆர்வத்தில் கொடுக்கும் முத்தம் என எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு காட்சியில் பாலுறவு வேட்கையுடன் எரிக்கா கோபுரத்தை அணுகுவது போலக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். உண்மையில் இரண்டு வெவ்வேறு காட்சிகளை வெட்டியும் ஒட்டியும் அத்தகைய அர்த்தம் வருவது போல் படத்தை தொகுத்திருக்கிறார் இயக்குநர். இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை எரிக்கா. படம் வெளியான பிறகுதான் எரிக்கா துவண்டு போகும் ஒரு விஷயம் நடந்தது. ஐஃபல் கோபுரத்தின் நிர்வாகம் எந்தக் காலத்திலும் இனி எரிக்கா ஐஃபல் கோபுரம் பக்கம் கூட வந்துவிடக் கூடாது என சொல்லிவிட்டது.

எரிக்காவின் காதல் முறிந்தது.

அச்செய்தியை கேள்விப்பட்டதும் மனமே உடைந்துவிட்டதாக சொல்கிறார் எரிக்கா. பெரும் அடியாக அச்செய்தி விழுந்தது என்கிறார். காதல் முறிந்தபிறகு வழக்கமாக காதலர்கள் இழந்தக் காதலை அல்லது முந்தையக் காதலை நோக்கிச் செல்வார்கள். எரிக்காவும் சென்றார். ஆனால் அந்த முந்தையக் காதலரும் மனிதர் இல்லை. பெர்லின் சுவர்!

”பெர்லின் சுவர் என்னை ஈர்த்தது. அந்த சுவரைப் பலர் வெறுத்திருக்கின்றனர். எந்தப் பாவமும் செய்யாத சுவர் அது. என்னைப் போலவே அச்சுவரின் மீதும் அபாண்டமான பழி வந்து சேர்ந்தது. அதனாலேயே அதை வெறுத்தார்கள். பெர்லின் சுவர் புறக்கணிக்கப்பட்டது போலவே நானும் புறக்கணிக்கப்பட்டேன். அதனாலேயே அச்சுவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது” எனச் சொல்கிறார் எரிக்கா.

‘அடப் போங்கடா’ என உங்களுக்கு தோன்றலாம். ‘இதெல்லாம் திருந்தாத ஜென்மம்’ எனவும் சொல்லலாம். ஆனால் இதுவே இன்று யதார்த்தமாக இருக்கிறது. இத்தகைய தன்மை மேற்கத்திய சிந்தனையிலிருந்து உருவாவதாக சொல்கிறார் எரிக்கா.

உண்மையில் எரிக்காவை நாம் புறக்கணித்துவிட முடியாது. நம் சமூகம் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு பலியாகி இருப்பவர் அவர். அவரைப் புறக்கணிப்பதால் அவரை நாம் தவிர்த்துவிடலாம். பிரச்சினையை தவிர்த்துவிட முடியாது. பிரச்சினையை பொருட்படுத்தாமல், அவரை மட்டும் புறக்கணிக்கத் தீர்மானித்தால், பிரச்சினை தீராமல் அங்கு சுற்றி இங்கு சுற்றி நம் வீட்டுக்குள்ளும் நுழையும்.

பிரச்சினை நம் வீடுகளில் நுழைந்து பல ஆண்டுகாலமாகி விட்டதென்பதே உண்மை!

எரிக்கா தற்போது க்ரேன் இயந்திரத்தை இயக்கும் வேலை பார்க்கிறார். எடை அதிகமாக இருக்கும் பொருட்களை தூக்கி வேறு இடத்தில் வைக்கும் கருவியையே க்ரேன் என அழைக்கிறோம். மெல்ல தற்போது க்ரேன் கருவியுடன் காதல் கொள்ளத் துவங்கியிருக்கிறார் எரிக்கா. தன் புதுக்காதலை பற்றி இப்படி சொல்கிறார்:

“இன்னொரு உறவுக்குள்ள போறதுக்கு ரொம்ப நாள் யோசிச்சேன். பிறகு போறது சரிதான்னு எனக்கு தோணுச்சு. திரும்ப காதல்வயப்பட மாட்டேன்னு நினைச்சிருந்தேன். இப்போ இந்த க்ரேன் கருவியை இயக்கிக்கிட்டிருக்கேன். இந்தக் க்ரேன் கூட நான் பழகுறத யாரும் கேள்வி கேட்க முடியாது. பழகினாதான் வேலை பார்க்க வைக்க முடியும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கட்டி எழுப்புற கட்டடங்களை எங்களோட குழந்தைகளாத்தான் நான் பார்க்கிறேன்”

எரிக்கா மாறப் போவதில்லை. அவர் வாழும் சூழலும் அந்தச் சூழல் கொடுக்கும் சிந்தனையும் மாறும் வரை எரிக்கா மாறப் போவதில்லை.

Also Read: விவாகரத்து செய்பவர்களை பழிபேசும் நம் சமூகம்.. இதில் இருந்து விடுபட உங்களுக்கான சில யோசனைகள் இங்கே!