Viral

#நவம்பர்8 - “நானோ சிப், GPS ட்ராக்கர்.. 2,000 நோட்டு எனும் சர்வரோக நிவாரணி” : பா.ஜ.க அள்ளிவிட்ட பொய்கள் !

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டம் என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பா.ஜ.க அரசு அறிவித்து இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.

மோடி அரசின் இத்தகைய அறிவிப்பின்போது, சரிந்த சிறுகுறு தொழில்கள் தற்போதுவரை எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை. முன்னதாக பா.ஜ.கவினர் மற்றும் மோடி ஆதராவளர்கள் நாடுமுழுவதும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு கொரோனாவே காரணம் என பழியை கொரோனா வைரஸ் மீது போட்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன?

கடந்த 2019ம் ஆண்டு நாடுமுழுவதும் பரவிய கொரோனா பாதிப்பு, இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா ஊரடங்கால் ஏற்கவே படுமோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம் மேலும் அதள பாதாளத்திற்கு சென்றது.

இதனால் பணமதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். மேலும், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதாரண மனிதர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்கள் செய்வோரும், அவசரத் தேவைகளுக்காக பணத்தை எதிர்பார்த்தோரும் பாதிக்கப்பட்டது ஒருபக்கம் இருக்க, இந்தத் திட்டத்தை ஆதரிக்க பா.ஜ.க-வினர் செய்த சர்க்கஸ் இருக்கிறதா அப்பப்பா..

மோடியின் அறிவிப்பால் இரவோடு இரவாக கறுப்புப் பணம் ஒழிந்து, இந்தியப் பணப்புழக்கம் அமெரிக்கா, ஜப்பானையெல்லாம் முந்தப் போகிறது எனக் களித்துக் கனவு கண்டார்கள் பா.ஜ.க-வினர். ஆனால் இப்போது நிலைமை பல்லிளிக்கிறது.

2,000 ரூபாய் நோட்டு ஒரு அதிசய நோட்டு என எஸ்.வி.சேகர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் மேஜிக் ஷோ காட்டத் தொடங்கிய தினமும் இன்றுதான். 2,000 ரூபாய் நோட்டு தொலைந்து போனாலும், நோட்டில் பொருத்தப்பட்டிருக்கும் நானோ சிப் உதவியுடன் GPS தொழில்நுட்பத்தின் மூலமாக அது இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

இனி பணம் திருட்டு, கொள்ளை போக வாய்ப்பே இல்லை என இஷ்டத்துக்கு அளந்துவிட்டது பா.ஜ.க-வின் விஞ்ஞான விங். இந்த அதிரடி நடவடிக்கையெல்லாம் மோடி மக்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன 15 லட்சத்தை டெபாஸிட் செய்யத்தான் எனவும் சிலர் கதையளந்து கொண்டிருந்தார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் 132-வது முறையாக புதிய இந்தியா பிறந்ததாகவும் பிதற்றித் திரிந்தார்கள் பா.ஜ.க அபிமானிகள். எல்லாம் சில காலம் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிந்தபாடில்லை.

இந்தியப் பொருளாதாரம் ஆட்டம்கண்டிருப்பது தான் மிச்சன். 90 நாள், ஆறு மாதம் என பூச்சாண்டி காட்டிய மோடியும் பின்னர் அந்தத் திட்டத்தையே வசதியாக மறந்துவிட்டார். பா.ஜ.க-வினரின் இந்த டீமானிட்டைசேஷன் காமெடிகளுக்கு மத்தியில், தேவைகளுக்குப் பணம் பெற முடியாமல், சிக்கித் சின்னாபின்னமானதென்னவோ சாமானிய மக்கள்தாம்.

இதனிடையே சமீபத்தில் வெளியான தகவலின் படி, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரொக்கத்தின் மதிப்பு 17.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்.21ம் தேதி புழக்கத்தில் இருந்த ரொக்க மதிப்பு 30.88 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரொக்கத்தின் அளவு ஜிடிபியில் 14.2% ஆக அதிகரித்துள்ளது.

பெருநகரங்களில் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்ட நிலையில், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்களை பொதுமக்கள் ரொக்கப்பரிவர்த்தனையே தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பாஜக மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனைத்து துறையிலும் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்பது தெரியவருகிறது.

Also Read: அனைத்துத் துறையிலும் தோல்வியடைந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. 14% அதிகரித்த ரொக்க பரிவர்த்தனை !