Viral

துப்பாக்கி குண்டு v/s பெட்ரோல் குண்டு.. அ.தி.மு.க, பா.ஜ.க-வின் வன்முறை அரசியலை நையாண்டி செய்த சிலந்தி!

'துப்பாக்கி குண்டு' கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருக்கிறது. அப்போது 'பெட்ரோல் குண்டு அங்கே வருகிறது.

பெட்ரோல் குண்டு: என்ன துப்பாக்கி குண்டு; ஏன் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்?

துப்பாக்கி குண்டு: என்னைப் பார்த்தால் உனக்கு அவ்வளவு ஏளனமாகப் போய்விட்டதா?

பெட்ரோல் குண்டு: நான் ஏன் உன்னை கேவலமாகக் கருதப்போகிறேன்; உனது சக்தி நான் அறியாததா?

துப்பாக்கி குண்டு: பின் என்ன? நீ வெடிக்கக்கூட இல்லை; வீசப்பட்ட பாட்டிலுக்குள் இருந்தது நீயா அல்லது உனது சகோதரன் மண்ணெண்ணெய்யா என்று கூடத் தெரிய வில்லை !

பெட்ரோல் குண்டு: பின்னே என்ன? இந்த நிலையில் நீ ஆதங்கப்படுமளவு நாட்டிலே என்ன நடந்துவிட்டது?

துப்பாக்கி குண்டு: என்ன நடந்துவிட்டதா? இப்படி மிக சர்வ சாதாரணமாக கேட்கிறாயே? நாட்டிலே நடப்பது உனக்குத் தெரியாதா? இன்றைய ஆளுங் கட்சிக்கு எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கேட்கும்போது, நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிடலாமா என்று கூட எனக்குத் தோன்றுகிறது.

பெட்ரோல் குண்டு: அய்யய்யோ; அப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதே; இப்படி நீ உணர்ச்சி வசப்பட்டுப் பேசிட என்ன காரணம் என்பதை நான் அறியலாமா?

துப்பாக்கி குண்டு: காரணம் உனக்கு உண்மையில் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறாயா?

பெட்ரோல் குண்டு: சத்தியமா எனக்கு ஒன்றும் தெரியாது; கொஞ்சம் விளக்கித்தான் கூறேன்!

துப்பாக்கி குண்டு: துப்பாக்கிக்குள் இருந்து பாய்வது மட்டுமல்ல; பாய்ந்து பல தூரம் பயணம் செய்து தாக்கும் என்னையும் குண்டு என்கிறார்கள்! வீசப்பட்டு எட்டும் தூரம் வரை எரிந்து சில நேரங்களில் வெடித்து, பல நேரங்களில் புஸ்வாணமாகிவிடும் உன்னையும் குண்டு என்கிறார்களே; அதனை நினைத்துதான் வருந்துகிறேன்!

பெட்ரோல் குண்டு: இதற்காகவாகவலைப்படுகிறாய்; நானும் ஏதோ என்னவோ என்று நினைத்து விட்டேன்! என்னதான் நான் குண்டு என்று கூறப்பட்டாலும் உனக்குள்ள வீரியம், சக்தி எனக்கு உண்டா ?

துப்பாக்கி குண்டு: என்ன சொல்கிறாய்?

பெட்ரோல் குண்டு: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் உன்னை (துப்பாக்கி குண்டு) பயன்படுத்தி 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரைப் பறித்தார்களே; நினைவிருக்கிறதா?

துப்பாக்கி குண்டு: மறக்கக்கூடியதா அந்த நிகழ்வு! பலியான 13 பேரில் 12 பேர் தலையிலும், மார்பிலும் பாய்ந்தேனே, அதைச் சொல்கிறாயா? இரண்டு பேர் தலையில் ஊடுருவிச் சென்றதெல்லாம் மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத நிகழ்வுகளல்லவா?

பெட்ரோல் குண்டு: உன்னால் மறக்கமுடியவில்லை; ஆனால் அன்று ஆட்சியிலிருந்தவர்கள் அதை மறந்து விட்டார்களே!

துப்பாக்கி குண்டு: அதனை எப்படி மறக்க முடியும்? என்னைப் பல பேர் மேல் பாய்ச்சி உயிரைக் குடித்ததால் அவர்களது குடும்பங்கள் வடிக்கும் கண்ணீரின் ஈரம் கூட காய்ந்திடாத நிலையில், எப்படி அந்த நிகழ்வை மறக்க முடியும்? அதை எல்லாம் மறந்துவிட்டு ; இன்று உன்னை உயர்த்திப் பேசுகிறார்களே; அதனால் தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெட்ரோல் குண்டு: விளங்கவில்லையே?

துப்பாக்கி குண்டு: என்னைப் பயன்படுத்தி 13 உயிர்களைப் பறித்தார்கள். செய்தி கேள்விப்பட்டு தமிழ் நாடே பதைபதைத்தது.அன்றைய முதலமைச்சரோ; இதை எல்லாம் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொள்ளுமளவு சுறுசுறுப்பாய் இயங்கினார்!

பெட்ரோல் குண்டு: நடந்த கதை ; நாடறிந்த கதை. அதற்கும் உன் கவலைக்கும் என்ன காரணம் என்று கூறினால்தானே விளங்கும்!

துப்பாக்கி குண்டு : அந்த சம்பவம் நடந்த போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இருந்தது அல்லவா?

பெட்ரோல் குண்டு: இருந்தது! அந்தக் கட்சிதான் ஒன்றியத்தில் ஆட்சியிலும் இருந்தது; அதற்கென்ன இப்போது?

துப்பாக்கி குண்டு : இவ்வளவு விபரம் தெரிந்த உனக்கு, நான் ஏன் இப்போது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவில்லையா?

பெட்ரோல் குண்டு: குழப்பாதே; விபரத்தை விளக்கிச் சொல்லு!

துப்பாக்கி குண்டு : சாதாரண ஜுஜுபி யான நீ; பல இடங்களில் வெடிக்கக் கூட இல்லை ! இன்னும் சில இடங்களில் எரியக்கூட இல்லை! இருந்தும், உன்னை எப்படியெல்லாம் புகழ்கிறார்கள் ; பார்த்தாயா?

பெட்ரோல் குண்டு: மேலும் குழப்பாதே ; விவரத்துக்கு வா!

துப்பாக்கி குண்டு : சும்மா பூச்சாண்டி காட்டிய உன்னை பெரிய பயில்வான் போல சித்தரித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிறார்கள் ; ஆனால் தூத்துக்குடியில் அத்தனை உயிரை வாங்கி, சட்டம் ஒழுங்குக்கு சமாதி கட்டிய என்னை இப்படிஎல்லாம் புகழ்ந்தார்களா? இதை எல்லாம் பார்க்கும்போது கவலைப் படாம இருக்க முடியுமா?

பெட்ரோல் குண்டு: இதுக்காகவா கவலைப்பட்டாய்? அரசியல்லே இதெல்லாம் சகஜம், விட்டுத் தள்ளு!

துப்பாக்கி குண்டு: உனக்கு பெரிய விஷயமில்ல; உன்னை வீசியதற்காக எதுவுமே தடைபடவில்லை ! எல்லாமே நாட்டில் ‘நார்மலாக'த்தான் இருக்குது, நீ வெடித்ததாகக்கூட செய்தி இல்லை; சில இடங்களில் உன்னை எறிந்ததாகத்தான் சொல்கிறார்கள்!

பெட்ரோல் குண்டு: ஏதோ பெரியதாக நடக்கும் என நினைச்சோம். எல்லாமே பிசுபிசுத்து விட்டதே என்று நினைத்தோ என்னவோ, பா.ஜ.க. தலைமையில் அதன் தலைவர் சம்பவ இடத்துக்கேச் சென்று ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தி-நாடாளுமன்றத் தேர்தலின்போதே சட்டமன்றத்துக்கும் . தேர்தல் வரும் எனப் பேசி மறைமுக உசுப்பலில் ஈடுபடுகிறார்!

துப்பாக்கி குண்டு: நான் தூத்துக்குடியிலே பல ரவுண்டுகள் வெடித்து, பல உயிர்களைப் பலிகொண்ட நேரத்தில், அந்த மாவட்டமின்றி பக்கத்து மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்றவற்றில் கூட பல நாட்களுக்கு 'இன்டர்நெட்' எல்லாம் முடக்கப்பட்டது. ஏன்; தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகத்தின்பலபகுதிகளிலிருந்தும் கண்டனம் எழுந்தது. தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கண்டனத்தை எழுப்பியது! அமெரிக்கா, கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் எல்லாம் கண்டனக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல் குண்டு: பிறகென்ன? உன் வலிமை உலகுக்கே எட்டியதே

துப்பாக்கி குண்டு: உண்மைதான்; அப்போது நாட்டிலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக மத்திய அரசை ஆண்ட பா.ஜ.க. சார்பில் யாரும் கூறவில்லையே!

பெட்ரோல் குண்டு: அண்ணாமலை போன்ற அரைக்கால் வேக்காட்டு அரசியல் தலைவர் பேசிடும் பேச்சுக்கு வருந்தாதே, தமிழக அரசியல் கட்சிகளில் அண்ணாமலை, ஜெயக்குமார் போன்ற கோமாளிகள் கொளுத்திப்போடும் சிரிப்பு வெடிகள் குறித்து கவலைப்படாதே! இவர்கள் தமிழக அரசியலில் காமெடிப் பாத்திரங்கள்!

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற கவுண்டமணி காமெடி வசனத்தை நினைத்துக்கொண்டு போய்த் தூங்கு!

- சிலந்தி

Also Read: "பகத்சிங் கனவு கண்ட இந்தியா என்ன தெரியுமா?".. மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!