Viral

ரூ.3.5 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்கள்.. KTM ShowRoom-மை அதிரவைத்த ஈரோடு இளைஞர்: என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவில் சட்டபூர்வமாக புழக்கத்தில் உள்ள நாணயங்கள் பலவற்றில் 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் , பத்து ரூபாய் நாணயங்கள் தங்களின் மதிப்பை இழந்து செல்லா காசாக உள்ளது. இதனிடையே 10 ரூபாய் நாணயங்களை ரூ. 3.5 லட்சத்திற்கு சேமித்து இளைஞர் ஒருவர் KTM இருசக்கர வாகனம் வாங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காடையாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது தந்தை அதே பகுதியில் உள்ள ஒரு டையிங் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார் .மேலும் சந்தோஷ் குமார் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்து தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் .

மேலும் இவர் வீட்டில் இருந்து வரும் நேரங்களில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட பந்தயப் புறாக்கள்மற்றும் லவ் பேர்ட்ஸ் வளர்ப்பில் ஈடுபடுவதோடு பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து KTMம் பைக் வாங்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள KTM showroomக்கு இரண்டு காரில் 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இதைப்பார்த்து showroom ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் ரூ.3.5 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சந்தோஷ் குமார், "பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது எனவும் சிறிய கடை முதல் பெரிய கடைகள் வரை பத்து ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்க மறுப்பதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்பூட்டும் விதமாக இதே பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனம் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்தார்

Also Read: ஹெலிகாப்டரில் பறந்து சென்ற இதயம்.. 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது சிறுமி: நெகிழ்ச்சி சம்பவம்!