Viral

ஆண், பெண் காதலை புரிந்துகொள்வது எப்படி? .. காதலுக்கான அடையாளம்தான் என்ன?

காதலுக்கான அடையாளம் என்ன?

முதல் விஷயம், you cannot seek love. காதல் தேவைப்படலாம். ஆனால் அதை எல்லாரிடமும் தேடக் கூடாது. காதலுக்கு ஒரு நேரம் வேண்டும். ஒரு புரிதல் வேண்டும். சகிப்புதன்மை வேண்டும். காதலே தன் காதலை கண்டடையும். நாம் அதை அவசரப்படுத்தக் கூடாது. விரும்புவதாக நம்பினால் அதிகபட்சமாக விருப்பத்தை சொல்லலாம். நிராகரிக்கப்பட்டால் கடத்தலே உத்தமம். நிராகரிப்பை ஒரு பெரும் காதல் தோல்வி போல் சித்தரிக்க மனம் முயற்சிக்கும். அதற்கு அனுமதிக்கக் கூடாது.

அடுத்ததாக பெண்கள்!

பெண்களுக்கு ஆண்களுக்கு இருக்கும் privilege இருப்பதில்லை. அவர்கள் காதலை கூட ரகசியமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்கான உணர்வு வெளிப்பாடுகளையே ஆண்களை போல் வெளிப்படுத்த அனுமதிக்காத இச்சமூகத்தில் காதலிக்க விரும்பும் ஒரு பெண்ணின் மனநிலையை சற்று யோசித்துப் பாருங்கள்.

காதலிக்கப் போவதாக வீட்டில் சொல்ல முடியாது. காதலிக்கவென ஒருவனை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கிருந்து தேர்ந்தெடுப்பது? நண்பர் வட்டத்திலிருந்தும் நண்பருக்கு நண்பர் என்பது போல் தேடி தேர்ந்தெடுக்கலாம். அந்த ஆண் ஒருவேளை சைக்கோ கொலைகாரனாக இருந்தால் என்ன செய்வது? எனவே பழகி பார்க்க வேண்டும். பழகினாலும் தன்னை பற்றி பிற ஆண்கள் கட்டக் கூடிய கதைகளும் இருக்கிறது. தன்னுடன் பழகும் ஆண் அடையும் மனநிலையும் இருக்கிறது. ஆணின் மனநிலையும் கற்பனை செய்து பாதிப்புக்குள்ளாகி விடக் கூடாது.

காதலை தேடிப் போகும் பெண்ணின் நிலை இதுதான். So naturally ஒரு பெண் பலருடன் நண்பராக இருப்பார். அவருக்குள் இருக்கும் Love Apparatus தனக்கான நபரை தேடிக் கொண்டே இருக்கும். ஓரளவுக்கு சரியான நபர் கிடைத்தால், காதலுறவின் விளிம்பு வரை நெருக்கம் கொள்வார். ஏதோ ஒன்று இடறினால் நண்பர் என விலகிக் கொள்வார்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஆண்களான நமக்கு பெண்களின் புரிதலை, மனவோட்டத்தை அத்தனை சுலபமாக புரிந்து கொள்ள முடியாது. காரணம், ஆணும் பெண்ணும் பழகிடக் கூடாதென பள்ளிப் பிராயத்திலிருந்து பிரித்து வைக்கப்படுகிறோம். எனவே அவர் என்னவாக நம்மிடம் பழகுகிறார் என்பதே நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

ஓர் அர்த்தபுஷ்டியான புன்னகையோ ஆழமாய் ஊடுருவி செல்லும் ஒரு பார்வையோ உரசுவதோ தலையில் தட்டுவதோ தோளில் கை போடுவதோ அணைப்பதோ நெற்றி முத்தமோ இன்னும் இத்யாதிகளோ அவர் காதலிப்பதாக நமக்குள் பட்டாம்பூச்சிகளை பறக்க விடலாம். ஆனால் அவர் அண்ணன், தம்பி, அப்பா ஆகிய ஆண்களுடனும் அத்தகைய இயல்போடு இருந்திருக்கலாம். உங்களுக்கு மட்டும் வேறொரு கம்பியை அச்செயல்கள் மீட்டி விடுமென தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் அவரும் பிற ஆண்களின் மனம் எப்படி இயங்கும் என அறியாமலிருக்கலாம் இல்லையா?

அல்லது தெரிந்தே கூட அத்தகைய நெருக்கத்தை காட்டலாம். நட்பை தாண்டி உங்களை அணுக முடியுமா என்கிற ஆராய்ச்சியின் வெளிப்பாடாக அது இருக்கலாம். உடனே நீங்கள் 'ஐ லவ் யூ' சொல்லி பானை போட்டு உடைத்திருக்கலாம். அவர் அஞ்சி உங்களை நண்பரென சொல்லி இருக்கலாம்.

எதுவுமாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் காதலுக்கு பொறுமை தேவை. இருத்தல் தேவை. பிறகு கடந்துபோதல் தேவை. நண்பர் என்றுவிட்ட பிறகு அப்பெண்ணின் உணர்வை மதித்து நீங்கள் நண்பராக நடந்து கொள்ள வேண்டும். பிறகு அது காதலாக கனிந்தால் கனியட்டும். ஆனால் அவகாசம் முக்கியம்.

Also Read: குடியுரிமை பெற்ற முதல் ரோபோட்.. மனிதன் போலவே சிந்திக்கும் சோஃபியாவை பற்றி தெரியுமா ?