Viral
’90% பணியாளர்கள் தங்களின் வேலையை விட விருப்பம்’.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சில நாட்களுக்கு முன்பு மெக்கின்ஸி ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஒரு முக்கியமான ஆய்வின் தரவுகளை வெளியிட்டிருந்தது.
இன்றைய நிலையில் மக்களின் மனநலம் பெரும் பாதிப்பைக் கண்டிருப்பதாக ஆய்வு கூறுகிறது. காரணம் என்ன தெரியுமா?
பணிச்சூழல்!
இது ஒன்றும் புதுத் தகவல் அல்ல. ஆய்வு மட்டும்தான் புதிது. மற்றபடி நாம் அன்றாடம் பார்த்து, அனுபவித்து, பேச மறுத்துக் கடந்து போகும் விஷயம்தான்.
முதலாளிக்கும் நிறுவனத்துக்கும் தொழிலாளி ஒரு இயந்திரம் மட்டும்தான். அவனது குடும்பமோ ஆரோக்கியமோ மனமோ ஓய்வோ அலுப்போ புறச்சூழலோ எல்லாமுமே முதலாளிக்கும் நிறுவனத்துக்கும் தொழிலாளி பிரச்சினை மட்டும்தான்.
எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அதன் மொத்த இயங்குமுறையும் உழைப்பவனுக்கு எதிராக மட்டுமே வகுக்கப்பட்டிருக்கும்.
கோவிட்டுக்கு பிறகு ஏற்பட்ட சுணக்கமும் வருமான இழப்பும் தொழிலாளர்களை கடிகார முள்ளைப் போல் ஓட வைக்க நிறுவனங்களை வேகப்படுத்தி இருக்கிறது.
விளைவாக தற்போது வந்த அறிக்கையின்படி பணியாளர்கள் தங்களின் உழைப்புச் சக்தியை இழக்கும் நிலையை விரைவிலேயே அடைந்து விடும் நிலை ஏற்பட்டிருக்கறது. மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் ஆகியவற்றை இந்தியப் பணியாளர்கள் அனைவரும் கொண்டிருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. அதற்கு காரணமாக 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிச்சூழலை குறிப்பிட்டிருக்கின்றனர்.
அத்தகைய பணிச்சூழலை குறிப்பிட அவர்கள் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். Toxic Environment! நச்சுத்தன்மை நிறைந்த சூழல்! அதாவது உங்களின் வாழ்க்கையையே அழிக்கும் தன்மைகளை மட்டுமே கொண்டிருக்கும் சூழலில்தான் உங்கள் வாழ்க்கைக்கான வருமானத்தை ஈட்ட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
இன்னும் ஒருபடி மேலே போய் இன்னொரு விஷயத்தையும் ஆய்வு சொல்கிறது. 41 சதவிகித பணியாளர்கள். அலுவலகத்தையும் குடும்பத்தையும் பிரித்தறிய முடியாதளவுக்கு பணி அழுத்தம் இருக்கிறதாம். இந்த இடத்தில் அந்தப் பணியாளர்களுக்கு பணி சார்ந்த அழுத்தத்துடன் குடும்ப அழுத்தமும் சேர்ந்து மன அழுத்தம் இரட்டிப்பாகிறது.
உழைக்கும் உணர்வு தீர்ந்து போவது, மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு ஆகிய விஷயங்களை முன் வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை பத்து பேரில் நான்கு பேர் இந்த சிக்கல்களில் உழலுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. விளைவாக 90 சதவிகிதப் பணியாளர்கள் அவர்கள் பார்க்கும் வேலையை விட விரும்புகின்றனரா எனக் கேட்டால், ஆம் என பதிலளித்திருக்கிறார்கள். வேறு வழியில்லாததால் மட்டுமே வேலை பார்க்கும் சூழல்தான் இருக்கிறது.
மெக்கின்ஸி ஹெல்த் இன்ஸ்டிட்யூட் இவற்றுக்கான தீர்வாக ஒரு விஷயத்தை முன் வைத்திருக்கிறது. அந்தத் தீர்வுதான் பணிச்சூழலில் நிலவும் கொடுமையின் தீவிரத்தை சுட்டுவதாக இருக்கிறது.
என்ன தீர்வு தெரியுமா?
பணியில் இருப்போரின் குறைகளை நிறுவனமும் மேலதிகாரிகளும் காது கொடுத்து கேட்க வேண்டுமாம். அதாவது கேட்பதை செய்து கூடத் தர வேண்டியதில்லை, காது கொடுத்து கேட்டாலே போதும் என்கிறது ஆய்வு. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
பணியாற்றும் எவரையும் சக மனிதராக கூட மதிக்கவில்லை என்பதுதான். மிக இயல்பான அடிப்படை மனிதமான சக மனிதரிடம் பொதுவாக பேசும் தன்மை கூட பணிச்சூழலில் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதாவது பணியாளர்கள் ‘ஸ்விட்ச் போட்டு’ இயக்கும் இயந்திரங்களாக மட்டுமே பாவித்து, அலுவல் விஷயங்களை மட்டுமே பேசிக் களைகையில் இயல்பாக இருக்க வேண்டிய மனிதத்தன்மையே அழிக்கப்படுகிறது.
பணியிடத்திலும் நிம்மதி இன்றி குடும்பத்திலும் நிம்மதியின்றி மனமும் ஆரோக்கியமின்றி வாழ்க்கைக்கான வருமானமும் இன்றி நாம் கட்டிக் கொண்டிருக்கும் உலகம்தான் எத்தனை தக்கையாக இருக்கும்?
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?