Viral

மதம், கடவுள் இரண்டுக்கும் என்ன தொடர்பு?.. மதமின்றி கடவுள் இருக்க முடியுமா?..

மதம், கடவுள்! இரண்டுக்கும் என்ன காரணம், என்ன தொடர்பு?

இன்று உலகம் முழுவதும் ஏதோவொரு மதம் பரவி கோலோச்சுவதை சுலபமாக நாம் ஒப்புக் கொள்ள முடியும். இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறித்துவ மதம், யூத மதம் என ஏதோ ஒரு வகை மதம் அரசாளும் எந்தவொரு நாட்டிலும் வழங்கப்படுவது யதார்த்தமாக இருக்கிறது.

மதம் இன்றி மனிதர்கள் இருக்கின்றனரா?

இருக்கிறார்கள். மதத்தை புறக்கணிப்பவர்கள் இருக்கின்றனர். அவர்களன்றி ஒரு சமூகமாகவே மதத்தின் தேவை அற்றவர்கள் இருக்கின்றனர். பழங்குடிகள்! பெரும்பாலான பழங்குடி சமூகங்களில் வழிபாடுகள் இருக்குமே ஒழிய மதமாக அது ஒருங்கிணைக்கப்பட்டிருக்காது. ஏதோவொரு வகை கடவுளை அல்லது இயற்கையை வணங்கும் வழிபாட்டை மட்டும் கொண்டிருப்பார்கள்.

மதமின்றி கடவுள் இருக்க முடியுமா?

முதலில் மதத்தையும் கடவுளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது ஒரு சமூக நிறுவனம். அதன் உற்பத்தி பண்டமே கடவுள்.

மக்களுக்கு கடவுளின் தேவை இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் கொடுக்கும் அழுத்தத்தில், கண்மூடித்தனமாக ஏதேனும் ஓர் ஆதரவு தேவைப்படுகிறது. அப்படித்தான் கடவுள்.

ஒரு சமூகத்தை நிர்வகிக்கும் அரசுக்கு, அத்தனை பெரிய மக்கள்திரளை ஒற்றையாக நின்று கையாள முடியாது. அதுவும் எண்ணற்ற குழுக்களாக பரிணமிக்கும் சமூகத்தில் தன்னுடைய அதிகாரத்தை செலுத்த அரசுக்கு வழிகள் தேவை.

ஆக, தனக்கு ஏதுவான கருத்துகளையும் சிந்தனையையும் உருவாக்கவும் மக்களிடம் அவற்றைத் திணிக்கவும் அவர்களை புதிதாக ஏதும் அரசுக்கு எதிராக சிந்தித்துவிடாமல் தடுக்கவும் கீழ்படியும்தன்மையை ஏற்படுத்தவும் அரசு பல சமூக நிறுவனங்களை உருவாக்குகிறது. இயக்குகிறது. அவற்றின் வழியே தன் அதிகாரத்தை சாமானியனின் மீது செலுத்துகிறது.

அப்படித்தான் மதம், அரசுக்கு!

கடவுளின் தேவை மனிதனுக்கு அந்தரங்க தேவை. மதமோ அரசுக்கு அடிப்படை தேவை. மதத்துடன் கடவுளை இணைத்துவிட்டால் மனிதனின் அந்தரங்கம் வரை செல்லும் வாய்ப்பு அரசுக்கு எளிதாக ஏற்பட்டு விடுகிறது. அரசு உருவாகக் விரும்பும் சிந்தனைகளை மனிதனின் மனதில் விதைக்கும் வழியும் எளிதாகி விடுகிறது. மிக எளிமையாக ஒரு நாட்டின் அரசு, தேசியம் போன்ற விஷயங்களை தனி மனிதனின் அகங்காரத்துக்கு கொண்டு சேர்க்க மதத்தால் முடிகிறது.

எளிய பார்வையில் மதம் இவற்றை செய்யாதது போல் தெரியலாம். ஆனால் மனிதனின் சிந்தனையில் மிக அடிப்படை மாற்றங்களையும் வன்ம சிந்தனைகளுக்கான அடித்தளத்தையும் அகங்காரத்துடன் உறவாடும் மதத்தால் எளிதாக செய்துவிட முடிகிறது.

அதனால் அரசுக்கு மதம் என்னும் நிறுவனம் அவசியமாகிறது. அரசுக்கு அவசியமாவதால் சமூகத்துக்கும் மதம் அவசியமாக்கப்படுகிறது. மதம் பிழைக்க கடவுள் தேவைப்படுகிறார்.

ஆக, உண்மையிலேயே கடவுள் பாவம். அது ஒரு வாயில்லா ஜீவன்!

Also Read: பழங்குடி மனிதனால் காட்டுக்கு ஆபத்து இல்லை ! பின்னர் வேறெந்த மனிதனால் இயற்கைக்கு ஆபத்து ?